கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் மற்றும் நிதித்துறைகளில் நிவாரணம் அளிக்கும் பொருட்டு, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.25 புள்ளிகள் குறைத்து 3.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
Advertisment
மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது, கொரோனா தொற்று பரவியுள்ள இந்த அசாதாரண காலகட்டத்தில், நாட்டின் பொருளாதார நிலையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள், இந்த கொரோனா களேபரத்திலும், சிறப்பாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. 2021-22ம் நிதியாண்டில் ,பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா விவகாரத்தால், பிப்ரவரி மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறையவில்லை என்பது சமீபத்தில் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்தி அட்டவணை மதிப்பீடுகளின் மூலமே தெரியவந்துள்ளது.
மார்ச் மாதத்தில், ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி மற்றும் விற்பனை சரிவடைந்துள்ளது. அதேபோல், இந்த மாதத்தின் மின்நுகர்வும் குறிப்பிட்ட அளவில் சரிவடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 34.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது 2008-09ம் நிதியாண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நிலைகுலைவின் போது ஏற்பட்டதை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு உத்தரவால் வங்கிச்சேவை பணிகள் பாதிக்கப்படவில்லை. இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் வழக்கம்போல தங்குதடையின்றி இயங்குகின்றன. ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், வங்கிகளில் பணப்புழக்கம், பரிமாற்றம் உள்ளிட்ட செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
நாட்டில் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ம் முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இரண்டாவது முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 27ம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ரெப்போ வட்டி விகிதம் 0.75 புள்ளிகள் அளவிற்கு குறைக்கப்பட்டு 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 2004 அக்டோபர் மாதத்திற்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் இந்தளவிற்கு குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேநாளில், வங்கிகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கி கையிருப்பு விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் அளவிற்கு குறைத்து 3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil