repo rate today : வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியான செய்தி தான். வங்கிகளில் வீட்டுக் கடன், வாகன கடன் வாங்க திட்டமிட்டுருப்பவர்களுக்கு இதுவே சரியான நேரம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு படி, ரெப்போ வட்டி விகிதமானது 5.40 சதவீதத்தில் இருந்து 5.15% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இன்று மும்பையில் நடைப்பெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
ரெப்போ வட்டி குறைப்பால் வீடு, வாகனங்கள் உள்ளிட்டவைக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 4 முறை 1.10% ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்த நிலையில் மீண்டும் 5வது முறையாக விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.ரெப்போ விகிதம் போன்ற வெளிப்புற அளவுகோல்களின் அடிப்படையில், வங்கிக் கடன்களை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 135 அடிப்படை புள்ளிகள், அல்லது 1.35 சதவீதம் அளவுக்கு ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி கூட்டத்தில், 2019 - 20ம் ஆண்டிற்கான ஜிடிபி 6.9 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததை, 6.1 சதவீதமாக குறைப்பது எனவும், 2020 - 21ம் ஆண்டிற்கான ஜிடிபி 7.2 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ விகிதம் தொடர்ந்து 5ஆவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது வங்கிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் சந்தோஷத்தை தந்துள்ளது. அண்மையில் குறைக்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதத்தால் பல முன்னணி வங்கிகளில் வீட்டு கடன், வாகன கடன், பர்சனல் லோன் ஆகியவற்றின் அடிப்படை வட்டிகள் மாறின.