ஆர்.சந்திரன்
இந்திய பங்குசந்தையின் அண்மைக்கால வரலாற்றில், தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய சந்தை நல்ல ஏற்றத்துடன் தனது வணிகத்தை முடித்த நாள் இது. இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 304 புள்ளிகள் ஏற்றமும், தேசிய பங்குச் சந்தை நிப்டி 92 புள்ளிகள் உயர்வும் கண்டன. அதனால், அவை முறையே 34,446 மற்றும் 10,583 என்ற அளவில் தனது வணிகத்தை முடித்துக் கொண்டன.
இன்று பங்கு வணிகத்தின்போது, ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோ துறை பங்குகள் ஏற்றம் கண்டன. ஐடி உள்ளிட்ட பிற தொழில்நுட்பம் சார்ந்த பங்குகளில் ஆர்வம் குறைவாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் எப்படி இருந்தது என்ற தகவல் புதனன்று வெளியாக உள்ளது. அது சந்தையின் போக்கில் அடுத்த நகர்வுக்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் இந்தியாவின் மூத்த பங்குசந்தையான மும்பை பங்குசந்தை சிறு முதலீட்டாளர்களை தன்பக்கம் ஈர்க்க, இன்று புதிய சலுகை ஒன்றையும் அறிவித்தது. இதன்படி, வரும் மார்ச் 12ம் தேதி முதல் சென்செக்ஸ் கணக்கிட உதவும் பங்குகளின் வணிகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு பரிவர்த்தனை கட்டணத்தில் இருந்து சலுகை அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் ஒரு வணிகத்துக்கு 50 காகள் முதல் 1 ரூபாய் 50 காசுகள் வரை இதற்குக் கட்டணம் வேறுபடுகிறது. இதனால், இந்த பட்டியலில் உள்ள 30 பங்குகளின் விற்பனையில் சுறுசுறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது கவனிக்கத்தக்கது.
உலக சந்தைகளைப் பொறுத்தவரை, ஆசிய நாடுகளில் எச்சரிக்கையுடனான ஏற்றம் தெரிந்தது. இந்த வாரத்தில் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க நாட்டின் பணவீக்க விகிதம் பற்றிய தகவல், அமெரிக்க மைய வங்கியின் புதிய தலைவரது அணுகுமுறை குறித்த புரிதல் போன்றவை அடுத்து வரும் நாட்களில் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்.