pan card online : பான் கார்டு என்றால் பலரும் பயந்து பின்வாங்கும் நிலை போய், இப்போது பான் கார்டு வாங்கினால் தான் வங்கி வாசலை மிதிக்க முடியும் என்றாகி விட்டது.டெபிட் கார்டு ,கிரெடிட் கார்டு வரிசையில் இன்றைய நவீன பொருளாதார உலகில், பான் கார்டும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
ஒருவரின் வங்கிக் கணக்கில் குறிப்பிடத் தொகைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யவோ, எடுக்கவோ பான் எண் அவசியமாக உள்ளது.இதேபோன்று வருமான வரிக் கணக்கு தாக்கலின்போதும் பான் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றின் வரிசையில் ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்படுவதும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலஅவகாசம் வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
பான் கார்டுக்கு உரிய விதிகளை வருமான வரித்துறை அடிக்கடி மாற்றி வருகிறது. பான் கார்டு விதிமுறைகள் மற்றும் அதை வைத்துக் கொண்டு மோசடி வேலைகளில் ஈடுப்படுபவர்களிடம் இருந்து நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இதோ பான் கார்டு குறித்த முக்கிய தகவலகள் மற்றும் விதிகள் உங்களுக்காக.. படித்து விட்டு தெரியாதவர்களுக்கு பகிருங்கள்.
1.வருமான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் 10 இலக்க எண் கொண்ட பான் கார்டை அளித்துள்ளது வருமான வரித்துறை. ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணபரிமாற்றம் செய்தால் அதற்கு பான் எண் கட்டாயம். மேலும் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தாலே பான் கார்டு கேட்பது வழக்கம்.
2. கணவரை பிரிந்து வாழ்பவரின் பிள்ளைகள் பான்கார்டில் தந்தை பெயரை குறிப்பிட தேவையில்லை.
3. வங்கி கணக்கு துவக்கவோ, வருமான வரி ரிடர்ன் பூர்த்தி செய்யவோ பான் கார்டு எண் கட்டாயம்.
4. மொத்த விற்றுமுதல், விற்பனை, மொத்த வருமானம் ஆகிய இனங்களில் நிதி ஆண்டில் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தாலும், பான் கார்டு முக்கியம்.
5. பணி நிமித்தமாக நீங்கள் வெளிமாநிலங்களுக்கு சென்றாலும், உங்களுக்கு வழங்கப்பட்ட பான் எண் இந்தியா முழுவதும் செல்லுபடியாகும். அதில் முகவரி மாற்றமோ, அதனை மதிப்பீடு செய்யும் அதிகாரி மாறுவதாலோ பான் கார்டு செல்லாததாகிவிடாது.
6. ஒன்று மேற்பட்ட பான் கார்டு குற்றம். அதேசமயம், ஒரே நேரத்தில் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை வைத்திருந்தாலோ, ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டைக்கு விண்ணப்பித்தாலோ, அது வருமான வரிச் சட்டப்படி குற்றமாகும்.
7. இந்தக் குற்றத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எனவே, தெரிந்தோ, தெரியாமலோ ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை இருந்தால், கூடுதலாக உள்ள அட்டையை உடனே வருமான வரித் துறையிடம் சமர்பிப்பதே புத்திசாலித்தனமாகும்.
8. பான் கார்டு வைத்திருந்தாலே ஒருவர் கட்டாயம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.ஆனால் இதில் உண்மையில்லை. வருமான வரிச் சட்டப் பிரிவு 139-இல் கூறப்பட்டுள்ள வரையறையின்கீழ் வருபவர்கள் மட்டும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தால் போதும் என வருமான வரித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.