ஆர்.சந்திரன்
இந்திய பங்குசந்தையில் இன்று பெரும் சரிவு காணப்பட்டது. இன்று ஒரு நாளில் மட்டும், இந்திய சந்தையில் விற்பனையான பங்குகளின் மதிப்பில் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டெண்ணான நிப்டி, இன்று 110 புள்ளிகளை இழந்து 10,249ல் தனது வணிகத்தை முடித்தது. மும்பை சந்தையின் சென்செக்ஸ் 429 புள்ளிகள் சரிவு கண்டு 33,317ல் ஓய்ந்தது.
இன்றைய சந்தை சரிவின் பெருமளவு, வணிகம் நிறைவடைவதற்கு முன் கடைசி 1 மணி நேரத்திற்குள், அதாவது மாலை 2 மணிக்குப் பிறகுதான் நடந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ள பெரும் நிதி மோசடி விசாரணை அமைப்பு 31 வங்கிகளின் முக்கிய அதிகாரிகளை விசாரிக்கப் போவதாகவும், அதன் முதல்கட்டமாக இன்று ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கோச்சர், ஆக்ஸிஸ் வங்கியின் சிஇஓ ஷிக்கா ஷர்மா உள்ளிட்ட உயர்திகாரிகளையும் விசாரணைக்கு அழைத்திருக்கிறது என்ற தகவல், சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் வங்கிப் பங்குகளின் விலை சரசரவென இறக்கம் கண்டன. நிரவ் மோடியின் உறவினர் மொஹல் சொக்சிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துக்கு 5000 கோடி ரூபாய் கடன் வழங்கிய விவகாரத்தில் இவர்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
மறுபுறம், அமெரிக்க அதிபர் அந்நாட்டுக்குள் இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதி செய்பவர்கள் மீது பொருள் குவிப்பு வரி விதிக்கப் போவதாக தெரிவித்திருந்தது சர்வதேச சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அமெரிக்கா மீது எதிர் நடவடிக்கைகளைத்தொடங்கப் போவதாக ஐரோப்பிய நாடுகள் காட்டிய செம்முகமும் சந்தையை முன்னேற விடாமல் சரியச் செய்தது. இது தவிர, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பலரும் இப்போது விற்றுக் குவிக்கும் மனபோக்கில் உள்ளதால், கடந்த 4 வணிக நாட்களில் மட்டும் நிகர விற்பனையாக 1200 கோடி மதிப்பிலான பங்குகள் தாயகம் திரும்பியுள்ளன. கடந்த பிப்ரவரியில் 11,037 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் இவ்விதம் கை மாறியுள்ளன.