/indian-express-tamil/media/media_files/2025/06/25/epfo-update-2025-06-25-13-23-05.jpg)
மாதம் ரூ. 5000 முதலீடு; ரூ 3.5 கோடி ரிட்டன்; பிராவிடன்ட் ஃபன்ட் மேஜிக் எப்படின்னு பாருங்க!
மாதத்திற்கு வெறும் ரூ.5,000 என்ற சிறிய தொகையை சேமித்து, உங்கள் ஓய்வூதிய காலத்தில் சுமார் ரூ.3.5 கோடி வரை நிதியை உருவாக்க முடியும். இந்த இலக்கை அடைய உதவும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம்தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund - EPF). இது அரசின் உத்தரவாதத்துடன், சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாத நம்பகமான முதலீடாகும்.
இ.பி.எஃப் என்றால் என்ன?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) இந்த ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தை நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியரின் அடிப்படைச் சம்பளத்தில் 12% ஊழியரின் பங்களிப்பாகவும், 3.67% முதலாளியின் பங்களிப்பாகவும் EPF கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த சிறிய முதலீடு, ஒருவர் தனது 58 வயது வரை தொடர்ந்து பங்களித்தால், ஒரு மிகப்பெரிய ஓய்வூதிய நிதியாக மாறும்.
இ.பி.எஃப் -ன் தனித்துவங்கள்
தேசிய ஓய்வூதியத்திட்டம் (NPS) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போன்ற பிற முதலீட்டுத் திட்டங்களைப் போல இல்லாமல், இ.பி.எஃப் ஒரு கட்டாய பங்களிப்புத் திட்டமாகும். இது ஊழியர்களிடையே முதலீட்டு ஒழுக்கத்தை தானாகவே உருவாக்குகிறது. மேலும், அரசு உத்தரவாதம் கொண்ட ஒரு முதலீட்டுத் திட்டமாகும்.
இ.பி.எஃப் கணக்கில் பங்களிப்புகள் எப்படிச் செய்யப்படுகின்றன?
ஊழியரின் பங்களிப்பு அடிப்படைச் சம்பளத்தில் 12%, முதலாளியின் பங்களிப்பு அடிப்படைச் சம்பளத்தில் 12%. இதில், 8.33% ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (Employees’ Pension Scheme - EPS), மீதமுள்ள 3.67% EPF கணக்கிற்கும் செல்லும். தற்போது, EPFO-க்கு அரசு ஆண்டுக்கு 8.25% வட்டி வழங்குகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஒரு ஊழியரின் மாதச் சம்பளம் ரூ.64,000 என்று வைத்துக்கொள்வோம். இதில், அடிப்படைச் சம்பளம் ரூ.31,900, வீட்டு வாடகைப்படி (HRA) ரூ.15,950 மற்றும் இதர படிகள் ரூ.16,150. ஊழியரின் இ.பி.எஃப். பங்களிப்பு அடிப்படைச் சம்பளத்தில் 12% அதாவது ரூ.3,828/மாதம். முதலாளியின் இ.பி.எஃப் பங்களிப்பு அடிப்படைச் சம்பளத்தில் 3.67% அதாவது ரூ.1,172/மாதம். மொத்த மாத பங்களிப்பு ரூ.3,828 + ரூ.1,172 = ரூ.5,000.
நீண்ட கால பலன்கள்
ஒருவர் தனது 25 வயதில் வேலையைத் தொடங்கி, தனது 58 வயது வரை (33 ஆண்டுகள்) இத்திட்டத்தில் தொடர்ந்து பங்களிப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் அவரது சம்பளம் 10% அதிகரிக்கும் என்றும், அதற்கேற்ப இ.பி.எஃப் பங்களிப்பும் அதிகரிக்கும் என்றும், 8.25% வட்டி தொடர்ந்து கிடைக்கும் என்றும் கணக்கிட்டால், ஓய்வூதியத்தின் போது அவரது சேமிப்பு சுமார் ₹3.5 கோடியை எட்டும். இந்த 33 ஆண்டுகளில், இ.பி.எஃப் கணக்கில் முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை சுமார் ரூ.1.33 கோடி ஆகும்.
இ.பி.எஃப் பங்களிப்புடன், முதலாளியின் பங்களிப்பில் 8.33% EPS திட்டத்திற்குச் செல்கிறது. இது ஊழியருக்கு ஓய்வூதியப் பலனை வழங்குகிறது. தற்போது, EPS திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ₹1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை, ஒருவரின் சம்பளம் மற்றும் சேவை காலத்தைப் பொறுத்து மாறுபடும்.
ஒழுக்கமான முறையில் இ.பி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்வது, உங்கள் ஓய்வூதிய வாழ்க்கையை மிகவும் நிம்மதியாக மாற்றும். மாதம் ரூ.5,000 என்ற சிறிய முதலீடு ஆண்டுதோறும் அதிகரிக்கும் சம்பளத்துடன் இணைந்து சுமார் ரூ.3.5கோடி நிதியை உருவாக்கும். இதுதவிர EPS திட்டத்தின் மூலம் ஓய்வுக்குப் பிறகும் ஓய்வூதியப் பலன் கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.