1 February Rules Change: பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் நிதி தொடர்பான பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி, சமையல் எரிவாயுவின் விலை திருத்தம், யு.பி.ஐ பணப்பரிவர்த்தனைகளில் மாற்றம், ஃபாஸ்டேக் கே.ஒய்.சி அப்டேட், வங்கி கடன் வட்டி விகிதம் உள்ளிட்ட முக்கியமான சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்த மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவற்றை தற்போது பார்க்கலாம்.
சிலிண்டர் விலையில் மாற்றம்:
பிப்ரவரி 1 முதல், 14.2 கிலோ எடையுள்ள எல்.பி.ஜி சிலிண்டரின் விலை ரூ. 50 அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மானியத் திட்டங்கள் தொடரும் நிலையில், நகர்ப்புற நுகர்வோரை இது பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
யு.பி.ஐ பணப்பரிவர்த்தனைகளில் திருத்தம்:
யு.பி.ஐ பணப்பரிவர்த்தனை ஐடிகளுக்கு, பயோமெட்ரிக் OTP முறையை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா கட்டாயமாக்கியுள்ளது. மேலும், சிறப்பு எழுத்துகளால் ஆன ஐடிகளுடன் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், எழுத்துகள் மற்றும் எண்கள் கொண்ட ஐடியின் பரிவர்த்தனைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ. 10 லட்சம் வரை உடனடி பணப்பரிமாற்றம்:
Immediate Payment service மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ. 10 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்யலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. பயனாளியின் பெயரைக் குறிப்பிடாமல் ரூ. 7 லட்சம் வரை உடனடி பரிமாற்றம் செய்ய முடியும்.
ஃபாஸ்டேக் கே.ஒய்.சி அப்டேட்:
ஃபாஸ்டேகில் கே.ஒய்.சியை புதுப்பிக்காமல் இருந்தால், டோல்கேட்டுகளின் வசதியை பயன்படுத்த முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதனை ஆன்லைனில் சுலபமாக மேற்கொள்ளலாம்.
எஸ்.பி.ஐ வீட்டுக் கடன் விகிதத்தில் குறைப்பு:
இந்த பிப்ரவரி முதல் எஸ்.பி.ஐ புதிய வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதற்கான ஆண்டு வட்டி விகிதம் 8.4 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி பல்வேறு முக்கிய மாற்றங்கள் இந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.