சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடைபெறும் வர்த்தக போரின் விளைவாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்துள்ளது. வெள்ளியன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.12 ரூபாயாக குறைந்திருக்கிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான சீனாவின் யுவான் மதிப்பும் 0.28 % குறைந்து 6.7943 யுவானாக இருக்கிறது.
இண்டெர்பேங்க் ஃபாரீன் எக்ஸ்சேஞ் மார்கெட்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் என்று ஆரம்பித்தது. ஆனால் சீனாவின் யுவான் மதிப்பும் சரியத் தொடங்கியதை தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு குறைந்துவிட்டது.
69.10 ரூபாய் என்பது தான் இது நாள்வரை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சந்தித்த மிகப்பெரும் சரிவு. இதுவும் கூட கடந்த ஜூன் 28ம் தேதி பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வர்த்தக போரின் விளைவாக இன்னும் இந்திய ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கும் என்று துறைசார் வல்லுநர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.