ஆர்.சந்திரன்
வெளிநாடு சென்று வேலை செய்யும் ஒரு நபருக்கு, அவரது நிறுவனம் இந்தியாவிலேயே சம்பளம் வழங்க நேரும்போது, அவருக்கு இனி வரிப்பிடித்தம் செய்ய வேண்டியதில்லை என, வரிவிதிப்பு தொடர்பான விவகாரங்களை கையாளும் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அத்தாரிட்டி ஃபார் அட்வான்ஸ் ரூலிங் என குறிப்பிடப்படும் அமைப்பு இதைத் தெரிவித்துள்ளது.
சாப்ட்வேர் உள்ளிட்ட, பல சேவைத்துறை நிறுவனங்களிலும், பல பன்னாட்டு நிறுவனங்களின் இந்தியப் பிரிவில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் இது இனிப்பான செய்தி. காரணம், இவ்வகை நிறுவனங்களில் இருந்துதான் சில தேர்ந்தெடுத்தப் பணியாளர்கள் மேற்கண்ட வகையில் பணியமர்த்தப்படுவது அதிகமாக நடக்கிறது.
ஒருவரது ஊதியத்திற்கு இருமுறை வரிவிதிப்பதைத் தவிர்க்க, பல்வேறு நாடுகளிடையே செய்து கொள்ளப்படும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்பாக நடந்து வந்த சர்ச்சையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், இத்தகைய பணியாளர் செய்யும் சேவை வெளிநாடுகளில் என்பதால், அங்கிருந்துதான் அவர் வருவாய் ஈட்டுகிறார் என்ற முகாந்திரத்தில் அந்த நாடு, அவருக்கு வரிவிதித்தால், அதை சம்மந்தப்பட்ட நிறுவனம்தான் ஏற்க வேண்டுமேயன்றி, பணி செய்யும் நபர் மீது விதிக்கக் கூடாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.