தினமும் ரூ.411 சேமிப்பதன் மூலம், அதாவது மாதத்திற்கு ரூ.12,500 அல்லது ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம், 15 ஆண்டுகளில் ரூ.43.60 லட்சம் வரி இல்லாத நிதியை திரட்ட முடியும். இதற்கு இந்திய அஞ்சல் துறையின் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund- PPF) திட்டம் சிறந்த தீர்வாக உள்ளது.
PPF திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: தற்போது, இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.9% வட்டி வழங்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் கணக்கிடப்படுகிறது. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் தொகையை ஒரே தவணையாகவோ அல்லது 12 தவணைகளாகவோ செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை, கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை என அனைத்திற்கும் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ் முழு வரி விலக்கு உண்டு. அரசு ஆதரவு பெறும் திட்டம் என்பதால், உங்கள் முதலீடு முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் உண்டு.
ரூ.43.60 லட்சம் பெறுவது எப்படி? நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையாக ரூ.43.60 லட்சத்தைப் பெறுவீர்கள். இதில், சுமார் ரூ.21.10 லட்சம் வட்டியாகக் கிடைத்திருக்கும். இந்த மொத்தத் தொகைக்கும் வரி விலக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு இந்தியக் குடிமகனும் வயது வரம்பின்றி PPF கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்ச முதலீடான ரூ.500-ஐ ஒரு நிதியாண்டில் செலுத்தத் தவறினால், கணக்கு செயலிழக்க நேரிடும். அவசரத் தேவைகளுக்காக, கணக்கு தொடங்கி மூன்றாவது நிதியாண்டு முதல் ஆறாவது நிதியாண்டு வரை டெபாசிட்டைப் பயன்படுத்தி கடன் பெறலாம். தற்போது, 'டாக்பே' (DakPay) செயலி அல்லது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) சேவைகள் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தலாம். பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் திட்டம், ஓய்வுக்காலம், குழந்தைகளின் கல்வி (அ) வீடு வாங்குதல் போன்ற எதிர்காலத் திட்டங்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் உறுதியான நிதி அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.