இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் உங்கள் கணக்கிலுள்ள பணத்தை எடுப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். எனவே கவனமாக செயல்பட வேண்டும். இல்லையெனில் அபதாரம் செலுத்த நேரிடும்.
உங்கள் வங்கி கணக்கில் போதிய இருப்பு இல்லாதபோது, நீங்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும்போது, அந்த பரிவர்த்தனை தோல்வியுற்றால் நீங்கள் அபதார தொகை செலுத்த வேண்டும். அபதார தொகை ரூ.20 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வரியையும் செலுத்த வேண்டும். இந்த அபதார தொகை ஒவ்வொரு தோல்வியுற்ற பரிவர்த்தனைக்கும் வசூலிக்கப்படும்.
இந்த அபதாரத்தை தவிர்க்க நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் கணக்கிலுள்ள இருப்பு விவரத்தை தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு ஏடிஎம் இல் உள்ள கணக்கு இருப்பு விவரம் என்ற பகுதியை தேர்ந்தெடுத்து தெரிந்துக்கொள்ளவும். முடிந்த வரை உங்கள் கணக்கு வரவு செலவுகளை ஞாபகம் வைத்துக்கொள்வது நல்லது.
மேலும், கணக்கு இருப்பை தெரிந்துக் கொள்ள ஏடிஎம், ஆன்லைன் வங்கி சேவை மற்றும் மொபைல் வங்கி சேவையை பயன்படுத்தலாம். இவை தவிர கூகுள்பே, ஃபோன்பே போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தலாம். ஏடிஎம் பரிவர்த்தனைகளை குறிபிட்ட முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.
ஒரு பெருநகர வாடிக்கையாளர் மாதத்திற்கு 8 முறை ஏடிஎம் பரிவர்த்தனைகளை இலவசமாக பயன்படுத்தலாம். இதில் எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து 3 முறையும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதேநேரம், சிறு நகர வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து 5 முறையும் என மொத்தமாக 10 முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதற்கு மேல் ஏடிஎம் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் உண்டு. எனவே குறைந்த அளவு ஏடிஎம் சேவையை பயன்படுத்துவது நல்லது.
மேலும், 2020 ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் ரூ.10000 எடுக்கும் போது அவர்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் ஒடிபியை ஏடிஎமில் பயன்படுத்தினால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற புதிய விதியை கொண்டு வந்தது. இந்த புதிய விதி வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை அளிக்க கூடியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil