வாடிக்கையாளர்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை புதுப்பிப்பதாகச் சொல்லி, கார்டு எண், சிவிவி எண்,ஒன் டைம் பாஸ்வார்டு போன்ற விவரங்களைக் கேட்டு வரும் மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வழியாகப் பணத்தை திருடும் கும்பல் இடம் இருந்து தப்பிக்க பல்வேறு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகிறது.
44 கோடி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை
அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, தனது 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு சைபர் அட்டாக் குறித்து எச்சரிக்கையை விடுத்துள்ளது.இந்த எச்சரிக்கையானது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ளது.
அதில், "போலியான கஸ்டமர் கேர் நம்பர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருங்கள். கஸ்டமர் கேர் நம்பரை எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் தேடுங்கள். மேலும், வங்கி கணக்கு விவரங்கள் யாருடனும் பகிராதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இத்துடன் வீடியோ ஒன்றையும் எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. அதில், ஒருவர் எஸ்பிஐ வங்கியின் கஸ்டமர் கேர் நம்பரை இணையதளத்தில் தேடுகிறார். அதிலிருக்கும் நம்பரை அழைத்து போது,அந்நபர் வங்கிக் கணக்கின் விவரங்களைக் கேட்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. வீடியோ இறுதியில், இத்தகையான சூழ்நிலையில், நீங்கள் report.phising@sbi.co.in என்ற தளத்தில் புகார் அளிக்கலாம் அல்லது சைபர் கிரைம் ஹேல்பலைன் நம்பர் 155260 அழையுங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.