பண்டிகை காலம் தொடங்கி விட்டதால் வங்கிகள் ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனுக்கான சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. எஸ்பிஐ விழாக்கால சலுகையாக இனி வீட்டுக்கடன் வாங்குபவர் 6.7 சதவிகிதத்துக்கும் குறைவான வட்டி விகிதத்தில் எந்தத் தொகைக்கும் வீட்டுக்கடன் பெறலாம்.
கடன் தொகையைப் பொருட்படுத்தாமல். கடன் தொகை எவ்வளவாக இருந்தாலும், வீட்டுக் கடன் பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் இப்போது 6.70 சதவிகிதத்தில் வீட்டுக் கடனைப் பெறலாம். முன்னதாக, SBI யில் வாங்கும் ரூ.75 லட்சத்திற்கு மேலான கடன்களுக்கு 7.15 சதவீத வட்டி செலுத்தப்பட்டது.
இந்த அதிரடி வட்டி குறைப்பின் மூலம் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ தொகையும் குறையும். சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் இதே வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படும். எஸ்பிஐ வழங்கி இருக்கும் இந்தச் சலுகை அதிகளவில் கடன் வாங்குவோருக்கு 45 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைவாக கிடைக்கும்.
30 ஆண்டுத் தவணையில் ரூ.75லட்சம் வரை கடன் வாங்கும் வாடிக்கையாளர் இந்த வட்டி விகித அடிப்படையில் ஏறத்தாழ ரூ.8 லட்சம் வரை சேமிக்க முடியும். வட்டி குறைப்பு மட்டுமல்லாமல் செயல்பாட்டு கட்டணத்தையும் 100 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்துள்ளது. இருப்பினும் இந்த வட்டி சலுகைகள் அவரவர் சிபில் ஸ்கோரினைப் பொறுத்தது என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil