கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் வாடிக்கையாளர்களின் நிதி நெருக்கடியைத் தணிக்க, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) சமீபத்தில் ஒரு புதிய தனிநபர் கடன் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அது கவாச் தனிநபர் கடன் திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ், ஒரு நபர் அவருக்கோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ கொரோனா சிகிச்சையின் செலவுகளை ஈடுகட்ட ரூ .25,000 முதல் ரூ .5 லட்சம் வரை கடன்களை பெற முடியும். மேலும் இது அடமானம் இல்லாத கடனாக வழங்கப்படுகிறது.
இந்த கடன் திட்டத்தின் மூலம், குறிப்பாக இந்த கடினமான சூழ்நிலையில் துரதிர்ஷ்டவசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பண உதவி கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப நிதி தீர்வுகளை உருவாக்குவதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம், என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ கவாச் தனிநபர் கடன்
கடன் விவரங்கள்
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் அடமானம் இல்லாத கடனை வழங்குகிறது. கடன் தொகையானது தகுதியைப் பொறுத்து ரூ .25,000 முதல் ரூ .5 லட்சம் வரை இருக்கும்.
வட்டி
கவாச் தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் உள்ள கடன் ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதத்தைக் கொண்டிருக்கும். இது மிகவும் குறைந்த வட்டி விகிதமாகும்.
கட்டணங்கள்
கடன்களைப் பெறுவதற்கு செயலாக்க கட்டணம் எதுவும் கிடையாது. வாடிக்கையாளர் கடனை முன்கூட்டியே கட்ட விரும்பினால் அதற்கு கட்டணங்கள் எதுவும் இல்லை. மேலும் அதற்கான அபராதத்தையும் வங்கி தள்ளுபடி செய்துள்ளது.
கடனின் கால அளவு
எஸ்பிஐ கவாச் தனிநபர் கடன்களுக்கான கால அளவு 5 வருடங்கள். மேலும் இந்த திட்டத்தில் கடன் வாங்குபவர் கடனை திருப்பிச் செலுத்துவதை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கலாம்.
யார் கடன் பெற முடியும்?
இந்த திட்டம் சம்பளதாரர்கள், சம்பளம் பெறாதவர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியது.. ஏப்ரல் 1, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், எஸ்பிஐ கவாச் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
கடனைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள்
கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களின் கொரோனா சோதனையின் அறிக்கை அவசியம். வங்கியிடமிருந்து இந்த தனிப்பட்ட கடனைப் பெறுவதற்கு தனிநபர் எந்தவொரு பிணையையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
எங்கு விண்ணப்பிக்கலாம்?
வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள எஸ்பிஐ கிளைக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் கடனுக்கான தகுதி மற்றும் கடன் தொகையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். எஸ்பிஐ பயனர்கள் யோனோ மொபைல் வங்கி பயன்பாடு மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
கடன் தொகை வாடிக்கையாளரின் சம்பளம் அல்லது ஓய்வூதியம் அல்லது சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தின் பிற நன்மைகள்
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், அந்த மருத்துவச் செலவுகளை திருப்பிச் செலுத்த இந்த கடனுக்காக விண்ணப்பிக்கலாம். ஏனெனில் "கொரோனா தொடர்பான மருத்துவ செலவினங்களுக்காக ஏற்கனவே செய்யப்பட்டுள்ள செலவினங்களை திருப்பிச் செலுத்துவதும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும்" என்று எஸ்பிஐ ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த கடன் திட்டம் ரிசர்வ் வங்கியின் கொரோனா நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்து வங்கிகளால் உருவாக்கப்பட்ட கொரோனா கடன் புத்தகத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.