ஏடிஎம் கார்ட் தொலைந்துவிட்டால்,உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடர்புகொண்டு, கார்டை செயலிழக்கச் செய்வோம். சில சமயங்களில் கார்ட் தொலைந்தது குறித்து புகார் அளிப்பதற்குள், அதிலிருந்து ஆயிரக்கணக்கில் திருடு போன சம்பவங்களை நாம் பார்த்திருப்போம்.
தொழில்நுட்ப ரீதியாகப் பணத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை வங்கி மேற்கொள்ளும் நிலையில், ஏடிஎம்மில் திருடும் போவதைத் தடுத்திட ஓடிபி திட்டத்தை எஸ்பிஐ வங்கி கொண்டு வந்துள்ளது.
எஸ்பிஐ வங்கி, கடந்த 01 ஜனவரி 2020 முதல் ஏடிஎம்மில் ஓடிபி வசதியைக் கொண்டு வந்துள்ளது. அப்போது, இரவு 8 மணி வரை காலை 8 மணி வரை, 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது ஓடிபி வசதியைப் பயன்படுத்தித் தான் பணம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்த திட்டத்தின் மூலம், பணம் திருட்டு முற்றிலும் தடுக்கப்படும் என்பதால் 24 மணி நேரமும் இந்த வசதியை எஸ்பிஐ கொண்டு வந்துள்ளது.
அதன்படி, இனி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-இல் ரூபாய் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுப்பவர்கள், பதிவு செய்த மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணையும் பதிவிட வேண்டும்.
ஓடிபி அடிப்படையிலான ஏடிஎம் செயல்படும் முறை
- பணம் எடுக்கையில், கார்டை செலுத்தியதும், பின் நம்பரை பதிவிட வேண்டும்.
- அடுத்ததாக, எடுக்க விரும்பும் பணத்தை குறிப்பிட வேண்டும்.
- உடனடியாக வங்கி கணக்குடன் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு, ஓடிபி நம்பர் வரும்.
- அந்த ஓடிபி நம்பரை, ஏடிஎம் திரையில் ஓடிபியை பதிவிட சொல்லும் இடத்தில் சரியாக பதிவிட்டால் மட்டுமே, பணத்தை எடுத்திட முடியும்.
இதன் மூலம், ஏடிஎம் மையத்தில் நடைபெறும் மோசடியை தடுத்திட முடியும் என வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு, 22 ஆயிரத்து 224 கிளைகள் உள்ளன. சுமார் 63 ஆயிரம் ஏடிஎம்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil