எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் ரூ.20,000 மட்டுமே எடுக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்:
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் வரம்பு நாளொன்றுக்கு ரூ.40,000 ஆக இருந்தது. இதனிடையே, எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் வரம்பை ரூ.20,000-ஆக குறைப்பதாக அவ்வங்கி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்திருந்தது.
ஏடிஎம் பணம் எடுப்பதில் மோசடிகள் நடப்பதாக அதிகளவில் புகார்கள் பெறப்பட்டதாலும், ரொக்கம் இல்லா பணப்பரிவர்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி இதற்கான காரணத்தையும் தெரிவித்தது.
இந்நிலையில், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் ரூ.20,000 மட்டுமே எடுக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.அதேசமயம் அதிகமான பணத்தை நாள்ஒன்றுக்கு எடுக்க வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் கிளாஸிக், மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகளை வங்கியில் கொடுத்துவிட்டு, அதிகமான பணம் எடுப்பதற்கான வேறுகார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் கோல்டு, பிளாட்டினம் டெபிட் கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நாள்ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.