ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு 'எஸ்.பி.ஐ பேட்ரன்ஸ்' என்ற சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் புதிதாக கணக்கு தொடங்கும் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதத்தில் கூடுதலாக 10 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகிறது.
'எஸ்.பி.ஐ பேட்ரன்ஸ்' திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
நோக்கம்:
மூத்த குடிமக்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்காக இந்த வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கணக்கு தொடங்கி தகுதியுடையவர்கள்:
80 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் (எஸ்.பி.ஐ ஊழியர்கள் உட்பட) அனைவரும் இந்த கணக்கை தொடங்கலாம்.
கூட்டுக் கணக்காக பராமரிக்க விரும்பினால், முதன்மைக் கணக்கு வைத்திருப்பவர் கட்டாயம் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.
தற்போதுள்ள டெர்ம் டெபாசிட் வாடிக்கையாளர்கள், எஸ்.பி.ஐ ஊழியர்கள் உட்பட அனைவரும், தகுதியான வயதை எட்டியதும் கூடுதல் வட்டி பலனை தானாகவே பெறுவார்கள்.
சி.பி.எஸ் அமைப்பில் பிறந்த தேதியின் அடிப்படையில், தானாகவே இந்த கணக்கு புதுப்பிக்கப்படும்.
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வைப்புத் தொகை:
குறைந்தபட்சம்: ரூ 1,000
அதிகபட்சம்: ரூ. 3 கோடிக்கும் குறைவாக
வைப்பு காலம்:
7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை.
செயல்பாட்டு முறை:
ஒற்றை அல்லது கூட்டு கணக்கு வைத்திருக்க வேண்டும்.
முன்கூட்டியே திரும்பப் பெறுதல்:
சாதாரண கால வைப்பு நிதிகளுக்கு பொருந்தக்கூடிய அபராத விதியுடன் அனுமதிக்கப்படுகிறது.
இதேபோல், 'ஹர் கர் லக்பதி' என்ற தொடர் வைப்பு நிதி திட்டத்தையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சிறு சேமிப்புகளை முதலீடு செய்வதன் மூலம் தங்கள் கணக்குகளில் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் சேமிக்க முடியும்.
'ஹர் கர் லக்பதி' தொடர் வைப்பு நிதி திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
நோக்கம்:
வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர டெபாசிட்கள் மூலம் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் சேமிக்க உதவும் வகையில் செயல்படுகிறது.
கணக்கு தொடங்க தகுதியுடையவர்கள்:
தனிநபர் கணக்கு அல்லது கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் இதனை தொடங்கலாம்.
10 வயதுக்கு மேற்பட்டவர்கள் (அவர்கள் தெளிவாக கையொப்பமிட முடியுமானால்) காப்பாளருடன் கணக்கு தொடங்கலாம்.
தவணைத் திட்டத்திற்கு இது அனுமதி அளிக்கிறது.
முதிர்வுத் தொகை:
தேர்ந்தெடுக்கப்பட்ட தவணை மற்றும் தவணைக் காலத்தைப் பொறுத்து ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் கிடைக்கும்.
வைப்பு காலம்:
3 முதல் 10 ஆண்டுகள் வரை.
முன்கூட்டியே கணக்கை முடிக்கும் வசதி:
ரூ. 5 லட்சம் வரை - 0.50% அபராதம்.
5 லட்சத்திற்கு மேல் - 1% அபராதம்.
7 நாட்களுக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு வட்டி இல்லை.
தவணையின் முன்பணம்:
முதிர்வு மதிப்பில் மாற்றம் இல்லை. தாமதமாக பணம் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.
தவணை செலுத்த தவறும் பட்சத்தில் வங்கியின் நடவடிக்கை:
தொடர்ந்து 6 முறை தவணை செலுத்த தவறினால், கணக்கு மூடப்பட்டு, அதில் இருக்கும் பணம் சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்படும்.
இந்த இரண்டு திட்டங்களைத் தவிர, மூத்த குடிமக்களுக்கு 'எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி', 'எஸ்.பி.ஐ அம்ரித் கலாஷ்' மற்றும் 'எஸ்.பி.ஐ வீ கேர்' போன்ற வைப்பு நிதி திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.