நாட்டின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன்கள் மீதான வட்டியில் 25 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.75 லட்சத்துக்கு மேல் வீட்டுக் கடன் பெறுவோர் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி தள்ளுபடி வசதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் கோருவோரின் சிபில் மதிப்பெண்ணுக்கு ஏற்ப இந்த வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும். எஸ்பிஐ வங்கியின் யோனோ செயலி மூலம் விண்ணப்பித்து இந்தச் சலுகையைப் பெறலாம்.
சமீபத்தில் வங்கி அறிவித்த விழாக்கால சலுகைகளின் நீட்சியாக கிரெடிட் மதிப்பெண் அடிப்படையில் ரூ.30 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 10 அடிப்படை புள்ளிகள் வட்டி தள்ளுபடி வழங்கப்பட்டு வந்ததை 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை 8 மெட்ரோ நகரங்களில் ரூ.3 கோடி வரை கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் எனக் கூறியுள்ளது. யோனோ செயலி மூலம் விண்ணப்பித்தால் அனைத்து விதமான வீட்டுக் கடன்களுக்கும் கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகள் வட்டி தள்ளுபடி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. எஸ்பிஐ வங்கியின் வீட்டுக் கடன்களில் ரூ.30 லட்சம் வரையிலான கடன்களுக்கு 6.90 சதவீதத்தில் இருந்து வட்டி ஆரம்பமாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil