SBIs controversial guidelines for pregnant women : மூன்று மாதத்திற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வேலை செய்ய தகுதி அற்றவர்கள் என்றும், குழந்தை பிறந்த நான்கு மாதங்கள் கழித்து அவர்கள் மீண்டும் பணிக்கு வரலாம் என்று வெளியிடப்பட்ட எஸ்.பி.ஐயின் அறிக்கை அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிக்கை தீண்டாமையை அடிப்படையாக கொண்டுள்ளது என்றும் சட்டத்திற்கு புறம்பாக உள்ளது என்றும் ட்வீட் செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நோட்டீஸ் அனுப்பிய கையோடு, இதற்கு பெண்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ வழிகாட்டுதல்களின் நகல்களும், தற்போது சர்ச்சைக்குரிய வகையில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்றும் பெண்கள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எஸ்.பி.ஐ வங்கியின் இந்த அறிக்கை பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அனைத்திந்திய எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். புதிதாக வேலைக்கு வருபவர்கள் அல்லது ப்ரோமோஷனுக்காக காத்திருக்கும் பெண்களுக்கான மருத்துவ வழிகாட்டுதல் குறிப்பில் மூன்று மாதங்களுக்கு மேல் அவர்கள் கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பணியை தொடர அல்லது பதவி உயர்வு பெற ”இடைக்கால தகுதி” அற்றவர்கள் என்று அறிவித்திருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil