மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஐந்தாவது பட்ஜெட்-ஐ நாளை (பிப்ரவரி 1) தாக்கல் செய்கிறார்.
இந்தப் பட்ஜெட் வளர்ச்சி மற்றும் நிதிப்பற்றாக்குறையை சமநிலைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சம்பளம் பெறும் வரி செலுத்துவோர், நடுத்தர வர்க்கம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான வரி நிவாரண நடவடிக்கைகளை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2023ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையும் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
2024 பொதுத் தேர்தலுக்கு முன் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
அந்த வகையில் வருமான வரி விலக்கு தொடர்பாக மூத்த குடிமக்கள், புதிய வீடு வாங்கும் நபர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் சம்பளம் பெறும் ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் வருமாறு:-
- சேமிப்பை ஊக்குவிக்க குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு கூடுதல் சலுகைகளை முதலாளிகள் வழங்க வேண்டும்.
- வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 80C இன் கீழ் உள்ள விலக்கு வரம்பு, தற்போதுள்ள ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.
- மருத்துவக் காப்பீடு மற்றும் செலவினங்களுக்கான ரூ.25,000 வரம்பு நீக்கப்பட்டு, தற்போதைய செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட வேண்டும்.
- வணிக உரிமையாளர்களைப் போலவே சம்பளம் பெறும் ஊழியர்களும் நிறுவனம் தொடர்பான செலவுகளைக் கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதை அறிமுகப்படுத்த வேண்டும்.
- ரிசர்வ் வங்கி வரி இல்லாத சேமிப்புப் பத்திரங்கள் 2020 போன்ற திட்டங்களை உருவாக்க வேண்டும்.
- மலிவு விலை வீடுகளுக்கான தேவை குறைவதால், முதல் 7 நகரங்களில் மலிவு விலை வீடுகள் வழங்குவதில் சரிவு ஏற்பட்டுள்ளது, ஏனெனில் டெவலப்பர்கள் இப்போது ரூ.40 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரையிலான நடுத்தர மற்றும் பிரீமியம் வீடுகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
- வருமான வரிச் சட்டத்தின் 24-வது பிரிவின் கீழ் வீட்டுக் கடன் வட்டியில் 2 லட்ச ரூபாய்க்கு தற்போது வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இது, குறைந்தபட்சம ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில், 2023ல் இந்தியப் பொருளாதாரம் 6.1% வளர்ச்சி அடையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/