இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக ஏற்றம் கண்டன. நிதி மற்றும் வங்கி பங்குகள் ஆதாயத்தில் வர்த்தகம் ஆகின. மேலும் பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு வலுப்பெற்று காணப்பட்டது. இதனால் உள்நாட்டு சந்தை குறியீடுகள் உச்சம் பெற்றன.
இதற்கிடையில் அடுத்த வாரம் அமெரிக்க வங்கிகள் வட்டி விகிதத்தை கூட்டுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நடப்பு வாரத்தின் வியாழக்கிழமை வரை 832.2 பில்லியன் டாலர் இந்திய பணத்திலான பங்குகளை வாங்கியுள்ளனர். ஆகையால் இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகத்தில் உச்சம் பெற்றன.
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 390 (0.70 சதவீதம்) புள்ளிகள் வரை உயர்ந்து 56,072 என வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 16,719 புள்ளிகளில் வணிகத்தை நிறைவு செய்தது.
தேசிய பங்குச் சந்தையை பொருத்தமட்டில் தொகுக்கப்பட்ட 15 பங்குகளில் 11 பங்குகள் லாபகரமாக வர்த்தகம் ஆகின. வங்கி மற்றும் நிதி சேவைகள் நிறுவன பங்குகள் முறையே 1.49 சதவீதம் மற்றும் 1.55 சதவீதம் என வர்த்தகம் ஆனது.