இந்திய பங்குச் சந்தைகள் மூன்றாவது நாளாக ஏற்றத்தில் வர்த்தகம் ஆகின. உலகளாவிய சாதகமற்ற சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாம் நாளாக ஏற்றத்தில் வர்த்தகம் ஆகியுள்ளன.
கடந்த வாரம் முதல் நான்கு நாள்கள் இந்தியப் பங்குச் சந்தைகள் பெரும் இறக்கத்தை சந்தித்தன. அப்போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி முக்கிய காரணியாக பார்க்கப்பட்டது.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைகள் மீள ஆரம்பித்தன.
இதையடுத்து நடப்பு வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் தொடர்ந்து இன்றும் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் லாபத்தில் வர்த்தகம் ஆகியுள்ளன. பங்குகளை பொருத்தமட்டில் ஆட்டோ மொபைல் மற்றும் வங்கிப் பங்குகள் லாபத்தில் வணிகமாகின.
இன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 246 புள்ளிகள் (0.45) சதவீதம் உயர்ந்து 54,768ஆக வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 62 புள்ளிகள் அதிகரித்து 16,341 ஆக காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையை பொருத்தமட்டில் நிஃப்டி மிட்கேப் 100 புள்ளிகள் (0.67) மற்றும் ஸ்மால்கேப் 1.02 சதவீதம் உயர்ந்தது.
மேலும் வங்கி மற்றும் ஆட்டோ மொபைல் பங்குகள் 1.02 சதவீதம் முதல் 1.05 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது. 30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தையில் ஆக்ஸிஸ் வங்கி, இண்டஸ் வங்கி, டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், ரிலையன்ஸ் இன்டஸ்ரீஸ், என்டிபிசி, இந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட பங்குகள் 2.35 சதவீதம் வரை உயர்ந்து அதிக லாபம் ஈட்டின.
நேஸ்லே இந்தியா, ஹெச்சிஎல்டெக், சன் பார்மா, கோட்டக் மஹிந்திரா, டாக்டர் ரெட்டிஸ், இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் , ஐடிசி, பவர்கிரிட் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியன நஷ்டத்தில் வர்த்தகம் ஆகின.