/indian-express-tamil/media/media_files/2025/09/04/sensex-nifty-jumps-gst-council-tax-cut-2025-09-04-12-35-11.jpg)
Sensex, Nifty surge over 1% each as GST rationalisation boosts sentiment
இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த அதிரடி முடிவுகள், பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில், கடந்த எட்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மறைமுக வரி விதிப்பில் ஒரு பெரிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் முக்கிய அம்சம், பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நான்கு விதமான வரி அடுக்குகளான 5%, 12%, 18% மற்றும் 28% ஆகியவை நீக்கப்பட்டதுதான். அதற்குப் பதிலாக, இரண்டு புதிய வரி அடுக்குகளான 5% மற்றும் 18% அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலில் உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியானவுடன், மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 1.01% (888.96 புள்ளிகள்) உயர்ந்து 81,456.67 ஆகவும், தேசியப் பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 1.07% (265.70 புள்ளிகள்) உயர்ந்து 24,980.75 ஆகவும் வணிகத்தைத் தொடங்கின.
புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளன. இந்த மாற்றத்தால், பெரும்பாலான தினசரி பயன்பாட்டுப் பொருட்களான சமையல் எண்ணெய், சோப்பு, ஷாம்பு, டூத் பிரஷ், சைக்கிள் போன்ற பொருட்களின் விலைகள் குறையக்கூடும். மேலும், தனிநபர்களால் வாங்கப்படும் ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆடம்பர மற்றும் கேளிக்கை பொருட்களுக்கான வரி 40% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் வி.கே.விஜயகுமார் இது குறித்து கூறுகையில், “இந்த புரட்சிகரமான ஜிஎஸ்டி சீர்திருத்தம் எதிர்பார்ப்பைவிட சிறப்பாக வந்துள்ளது. இது பல்வேறு துறைகளுக்கு பயனளிக்கும். இதன் மூலம், இந்திய நுகர்வோர் குறைந்த விலையில் பொருட்களைப் பெற முடியும். ஏற்கனவே வளர்ச்சிப் பாதையில் இருக்கும் பொருளாதாரத்தில், இந்த நுகர்வு அதிகரிப்பு மிகப்பெரிய உந்துதலை அளிக்கும்,” என்று தெரிவித்தார்.
கோடக் மஹிந்திரா ஏஎம்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிமேஷ் ஷா, “இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு, அமெரிக்க வரி விதிப்பின் எதிர்மறை விளைவுகளை ஈடுசெய்ய ஓரளவு உதவும்,” என்று கூறினார்.
வாகனங்கள், எஃப்.எம்.சி.ஜி., எலக்ட்ரானிக்ஸ், சிமெண்ட் மற்றும் காப்பீடு போன்ற பல்வேறு துறைகளின் பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, ஆட்டோமொபைல் துறை சிறப்பான முன்னேற்றத்தைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வரி விகிதங்களின்படி, ஏர் கண்டிஷனர், தொலைக்காட்சி மற்றும் பாத்திரங்கள் கழுவும் இயந்திரம் போன்ற பொருட்களுக்கான வரி 28%ல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறிய கார்களுக்கான வரி விகிதமும் 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. எலாரா கேப்பிட்டல் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் கரிமா கபூர், “இன்று அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி விகித மாற்றங்கள், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு, பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் பணவீக்கக் குறைப்பு ஆகிய அனைத்தும் நுகர்வை அதிகரிக்கும் காரணிகள். இந்த ஜிஎஸ்டி மாற்றத்தால் அடுத்த 4-6 காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 100 முதல் 120 புள்ளிகள் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
சந்தையில் நிஃப்டி ஆட்டோ 2.06% மற்றும் நிஃப்டி எஃப்.எம்.சி.ஜி. 1.67% உயர்வுடன் முன்னேற்றம் கண்டன. குறிப்பாக, மஹிந்திரா & மஹிந்திரா (7.27%), பஜாஜ் ஃபைனான்ஸ் (4.96%), ஈச்சர் மோட்டார்ஸ் (3.27%), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (2.54%) மற்றும் நெஸ்லே இந்தியா (2.43%) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்தன. மேலும், எல்ஐசி பங்குகள் 2.2% உயர்வுடன் காணப்பட்டன. ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் போன்ற மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளும் முறையே 1.30%, 2.42% மற்றும் 1.43% வரை உயர்ந்தன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.