ஓய்வு காலத்திற்கு பிறகு மாதாந்திர பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கு இப்போதே சேமிக்க வேண்டும். ஓய்வுகாலம் என்பது பொறுப்புகள் இல்லாத மற்றும் சுதந்திரம் நிறைந்த புதிய வாழ்க்கையின் தொடக்கமாகும். ஆனால் வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்தின் அழகை அனுபவித்து அதை முழுமையாக வாழ, ஒருவர் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும். கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதன் மூலம் இது சாத்தியமாகும். ஓய்வுகாலத்திற்கான சிறந்த 6 திட்டங்களை பற்றி காண்போம்.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா
மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களில் மிக முக்கியமான திட்டம்தான் இந்த பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக 60 வயதிற்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்கு 10 வருடங்களுக்கு 8 சதவீதம் வரை வட்டி உறுதியாகக் கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
ஓய்வு காலத்தில் மூத்த குடிமக்கள் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அஞ்சலகம், வங்கிகளில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் 60 வயது நிறைவடைந்தவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த சேமிப்பு கணக்கிற்கு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.4% வட்டி வழங்கப்படுகிறது. டெபாசிட் செய்த நாளில் இருந்து ஓராண்டுக்குள் கணக்கை முடித்துக்கொண்டால், அதுவரை வழங்கப்பட்ட வட்டித் தொகையை டெபாசிட் தொகையில் இருந்து கழித்து, எஞ்சிய தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேரும் மூத்த குடிமக்கள் டெபாசிட் தொகை முதிர்ச்சி அடைவதற்கு முன்பாக இறந்துவிட்டால், உரிய வட்டியுடன் தொகை திருப்பி வழங்கப்படும்.
RBI சேமிப்பு பத்திரம்
மத்திய அரசின் 7.15% மாறுடும் (ஃப்ளோட்டிங்) வட்டி தரும் சேமிப்பு பத்திரம். இதில் குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு கிடையாது. இப்பத்திரத்தில் தனிநபர்கள், கணவன் மனைவி கூட்டாக, கூட்டுக் குடும்பத்தினர் என அனைத்து தரப்பினரும் முதலீடு செய்யலாம். முதிர்வுக் காலம் 7 ஆண்டுகள்.
வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனம், கார்ப்ரேட் FDக்கள்:
மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை(FD) உறுதிப்படுத்தப்பட்ட வருமானத்துடன் அதிக வட்டி விகிதங்களைக் கொண்டிருப்பதால், விருப்பமான முதலீடாக உள்ளது. தற்போது மூத்த குடிமக்களின் நிலையான வைப்பு கணக்கிற்கு சர்வோதயா சிறு நிதி வங்கி 7.75% வட்டி விகிதங்களை ஐந்து வருட காலத்திற்கு வழங்குகிறது.
ஆயுள் காப்பீட்டாளர்களின் வருடாந்திர திட்டங்கள்
வருடாந்திர திட்டத்தில் ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான வருமானம் பெறப்படுகிறது. இந்த வழியில், ஒரு மொத்த முதலீட்டிற்குப் பிறகு இதுபோன்ற திட்டங்களில் ஒரு நிலையான வருமானம் தவறாமல் உள்ளது. இது ஓய்வூதிய இலாகாவின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகிறது. வருடாந்திரம் என்பது பொதுவாக ஆயுள் காப்பீடு அல்லது ஓய்வூதியத்தை செலுத்துவதாகும். வருடாந்திர திட்டத்தில், நபர் நேரடியாக முதலீடு செய்கிறார். பின்னர் அது எதிர்காலத்தில் மாத, காலாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் செலுத்தப்படுகிறது.
பிபிஎஃப்
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்ல, ஓய்வு காலத்தில் மிகவும் பயனளிக்கும் திட்டம். இதில் வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் உள்ளன. ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகையைச் சேமித்து நீண்ட கால அடிப்படையில் மிகப் பெரிய லாபத்தை ஈட்ட பிபிஎஃப் சேமிப்பு உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். தற்போதைய நிலையில், பிபிஎஃப் திட்டத்தில் 7.1 சதவீத வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்துக்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
தேசிய ஓய்வூதிய திட்டம்
இத்திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சியின் கீழ் வரிச்சலுகை வழங்கப்படுகிறது. தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து உங்களது ஓய்வூதியத் தொகையின் ஒரு பகுதியை, முறையான காரணங்களுக்காக பெற்றுக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.