/indian-express-tamil/media/media_files/2025/04/21/CfK9cm3LmOhZpCsY56FM.jpg)
வருங்காலத்தில் பொருளாதார இடர்பாடுகள் இன்றி வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்வதற்கு சேமிப்பு என்பது மிகவும் அவசியமான செயல் திட்டமாகும். அந்த வகையில் சரியான சேமிப்பு முறையை தேர்ந்தெடுப்பது முக்கியம். அதனடிப்படையில் சேமிப்பை சாத்தியப்படுத்தக் கூடிய சில வழிமுறைகள் பாஸ்வாலா யூடியூப் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இக்குறிப்பில் காணலாம்.
அந்த வகையில் ஒவ்வொரு நாளும் நாம் எந்த விஷயங்களுக்காக செலவு செய்கிறோம் என்பதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அத்தியாவசிய செலவுகள் மற்றும் தேவையில்லாத செலவுகளை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
அடுத்தபடியாக, நிதி சார்ந்த முடிவுகளை உணர்ச்சிப்பூர்வமாக எடுப்பதை தவிர்க்க வேண்டும். எதிர்காலத்தில் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால், இன்று நாம் சேமித்து வைக்க வேண்டியது அவசியம். எனவே, எந்த விதமான காரணங்களை கருத்திற்கொண்டும் சேமிப்பை தவிர்க்கக் கூடாது.
நாளை செலவு செய்ய வேண்டிய பணத்தை இன்றைய தினமே அவசரமாக செலவு செய்யக் கூடாது என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். உதாரணமாக ஒரு நபர் ரூ. 80,000 ஊதியம் பெறுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். இவ்வளவு வருமானம் வாங்கும் போதும் மாத இறுதியில் செலவுக்கு பணம் இல்லாமல் அந்நபர் இருக்கிறார் என்றால், சரியான திட்டமிடல் இல்லை என்று அர்த்தம். அந்த வகையில், சரியாக திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.
இது தவிர சிறிய செலவுகளாக இருந்தாலும் கூட அவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ரூ. 50 அல்லது ரூ. 100 என்று நீங்கள் செய்யும் செலவு கூட ஆண்டு கணக்கில் எடுத்துக் கொண்டால் மிக அதிகமாக மாறி விடும். எனவே, சிறிய தொகையாக இருந்தாலும் கூட அது தேவை தானா என்று உணர்ந்து செலவிட வேண்டும்.
உணவு, வீட்டுமனை, ஆடை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எப்போதும் கருத்திற்கொள்ள வேண்டும். இந்த விலைவாசி உயர்வு காலப்போக்கில் நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தின் மதிப்பையும் குறைத்து விடும். இதற்காக சேமிப்பு மட்டுமின்றி அப்பணத்தின் மதிப்பு குறையாமல் இருக்கும் வகையில் முதலீடு செய்வது அவசியம்.
மேலும், நமக்கு தேவையான அனைத்து ஆவணங்களை பாதுகாப்பாக எப்போது வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தும் வகையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவக் காப்பீடு, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் புதுப்பிக்க வேண்டியதாக இருக்கும். அவ்வாறு செய்யாவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, இவற்றை சரியாக புதுப்பித்து வைத்திருக்க வேண்டும்.
பணத்தை முதலீடு செய்யும் அதே சூழலில், மருத்துவக் காப்பீடு போன்றவற்றை எடுத்துக் கொள்வது அவசியம். இது நம்முடைய குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும். ஒருவேளை உங்களது குடும்பத்தில் நீங்கள் மட்டுமே வருமானம் ஈட்டும் நபராக இருந்தால், கட்டாயமாக மருத்துவக் காப்பீட்டில் பணம் செலுத்த வேண்டும்.
இத்தகைய செயல்முறைகளில் நம்முடைய பணத்தை சரியாக முதலீடு செய்திருந்தால், எதிர்காலம் குறித்து அச்சமின்றி வாழ முடியும். மேலும், பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.