கோவை கொடிசியா சார்பாக டிசம்பர் 21-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஷாப்பிங் திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கொடிசியா வளாகத்தில் ஷாப்பிங் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான திருவிழாவின் பணிகள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஷாப்பிங் திருவிழாவின் தலைவர் நந்தகோபால், கொடிசியா தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, "சுமார் ஒன்றரை லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த திருவிழா நடைபெறுகிறது. இதில், 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உணவு மற்றும் விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சாதனங்கள், சூரிய ஒளி சாதனங்கள், தங்கம் மற்றும் வைர நகைகள், பரிசு பொருள்கள், ஜவுளி வகைகள், காலணிகள், பாரம்பரிய ஓவியங்கள், கைவினைப் பொருள்கள், உடற்பயிற்சி சாதனங்கள், ஆட்டோமொபைல் உதிர் பாகங்கள் ஆகிய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக கண்காட்சி அமையவுள்ளது.
காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு, ரூ. 50 நுழைவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.
செய்தி - பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“