/indian-express-tamil/media/media_files/2025/11/04/russia-oil-exports-2025-11-04-08-54-40.jpg)
அமெரிக்கத் தடை எதிரொலி: இந்தியாவுக்கான ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி கடும் வீழ்ச்சி!
மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft), லுகாயில் (Lukoil) மீது அக்.22 அன்று அமெரிக்கா தடைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிற்கான ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி (dispatches) கடுமையாகக் குறைந்துள்ளதாக தற்காலிக டேங்கர் தரவுகள் தெரிவிக்கின்றன. இது இன்னும் ஆரம்ப நாட்களே என்றும் தெளிவான நிலவரம் தெரிய ஒருமாதம் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என்றும் தொழில்துறை வல்லுநர்கள் நம்புகின்றனர். இருப்பினும், நவ.21 முதல் நடைமுறைக்கு வரவுள்ள வாஷிங்டனின் இந்த தடைகள் குறித்து இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் எச்சரிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது.
உலகளாவிய கமாடிட்டி டேட்டா மற்றும் பகுப்பாய்வு வழங்குநரான 'கெப்ளர்' (Kpler) நிறுவனத்தின் தற்காலிக கப்பல் கண்காணிப்புத் தரவுகளின் படி, அக்.27-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளைக்கு சராசரியாக 1.19 மில்லியன் பீப்பாய்களாக (bpd) இருந்தது. இது, முந்தைய 2 வாரங்களில் சராசரியாக 1.95 மில்லியன் bpd ஆக இருந்ததிலிருந்து குறிப்பிடத்தக்க சரிவாகும்.
எதிர்பார்த்தபடியே, ரஷ்யாவின் மொத்த எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பாதிக்கும் மேல் பங்களிக்கும், மற்றும் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் 3-ல் 2 பங்கைக் கொண்டிருந்த ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகாயில் நிறுவனங்களின் ஏற்றுமதி குறைந்ததே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட்-டிடம் இருந்து இந்தியாவிற்கான ஏற்றுமதி, முந்தைய வாரத்தில் 1.41 மில்லியன் bpd ஆக இருந்த நிலையில், அக்.27-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.81 மில்லியன் bpd ஆக சரிந்தது. லுகாயில் நிறுவனத்திடமிருந்து, முந்தைய வாரம் 0.24 மில்லியன் bpd ஆக இருந்த ஏற்றுமதி, அக்.27-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெயை இந்திய துறைமுகங்களுக்கு முக்கிய விநியோக வழித்தடமான சூயஸ் கால்வாய் வழியாகக் கொண்டு வரும் டேங்கர்களின் பயண நேரம் ஒரு மாதம் வரை ஆகலாம். இதைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த இரு நிறுவனங்களுடனான அனைத்து பரிவர்த்தனைகளையும் முடித்துக் கொள்ள வாஷிஙக்டன் விதித்த நவ. 21 காலக்கெடுவுடன் இந்த ஏற்றுமதி சரிவு ஒத்துப்போகிறது. அதுவரை, இந்திய துறைமுகங்களுக்கு ரஷ்ய எண்ணெய் விநியோகம் சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தடைகளை விதிப்பதற்கு பல வாரங்களுக்கு முன்பே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்ததால், அக்டோபர் மாத விநியோகம் சீராக இருந்தது.
ரோஸ்நெஃப்ட், லுகாயில் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதால், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி பெருமளவு குறைய உள்ளது. சுத்திகரிப்பு நிறுவனமான HPCL-மிட்டல் எனர்ஜி (HMEL) ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்திய சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), சர்வதேச சமூகம் விதிக்கும் அனைத்து தடைகளுக்கும் இணங்குவதாகக் கூறி உள்ளது, ஆனால் ரஷ்ய இறக்குமதியின் எதிர்காலம் குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் பாதியைக் கொண்டிருக்கும் தனியார் துறை ஜாம்பவானான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL), தடைகளின் தாக்கங்கள் மற்றும் இணக்கத் தேவைகளை மதிப்பீடு செய்து வருவதாகவும், இந்திய அரசின் வழிகாட்டுதல்களை "முழுமையாகப் பின்பற்றும்" என்றும் கூறியுள்ளது.
அமெரிக்காவிடமிருந்து '2-ம் நிலைத் தடைகள்' (secondary sanctions) வரக்கூடும் என்ற அச்சுறுத்தலே, இந்தியா போன்ற நாடுகள் (அரசியல் ரீதியாக ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை எதிர்த்தாலும்) வாஷிங்டனால் தடைசெய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து விலகி இருக்க முக்கியக் காரணமாகும்.
'முதன்மைத் தடைகள்' (Primary sanctions) முக்கியமாக அமெரிக்க நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்வதைத் தடுக்கும். ஆனால் '2-ம் நிலைத் தடைகள்', அமெரிக்காவின் சட்டக் கட்டுப்பாட்டில் இல்லாத பிற நாட்டு நிறுவனங்கள், தடைசெய்யப்பட்ட நிறுவனத்துடன் வர்த்தகம் செய்வதைத் தடுக்க முற்படுகின்றன. இதனால், இந்திய நிறுவனங்களும் வங்கிகளும் இரண்டாம் நிலைத் தடைகளுக்கு ஆளாகாமல் இருக்க மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படும் என எண்ணெய் தொழில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி ஏன் குறையும்?
இன்றைய தேதியில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 35% ரஷ்ய எண்ணெய்யாகும். அக்.27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் குறைந்த ஏற்றுமதி, அமெரிக்காவின் கடுமையான நடவடிக்கை, 2-ம் நிலைத் தடைகள் குறித்த அச்சம் மற்றும் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு விலையில் பெரிய சேமிப்பு இல்லாதது போன்ற காரணங்களால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் ஆகியவற்றின் கொள்முதல் குறைந்து வருவதை இது சிக்னல் செய்கிறது.
கெப்ளர் நிறுவனத்தின் முன்னணி ஆராய்ச்சி ஆய்வாளர் சுமித் ரிடோலியா கூறுகையில், "தடைகளைத் தொடர்ந்து, காலக்கெடுவுக்கு முன்னதாக ரஷ்ய கச்சா எண்ணெய் வரத்து அதிகரிப்பதை கண்டோம். நயாரா தவிர வேறு எந்த சுத்திகரிப்பு நிறுவனமும் தடைசெய்யப்பட்ட சப்ளையர்களிடம் இருந்து இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கவில்லை. நவ.21 வரை ரஷ்ய கச்சா எண்ணெய் வரத்து ஒரு நாளைக்கு 1.6 - 1.8 மில்லியன் பீப்பாய்கள் வரை நீடிக்கலாம், அதன் பிறகு OFAC தொடர்பான அபாயங்களைத் தவிர்க்க சுத்திகரிப்பு ஆலைகள் கொள்முதலைக் குறைக்கும்," என்றார். (OFAC என்பது அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் ஆகும், இது வாஷிங்டன் விதிக்கும் பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகளை நிர்வகிக்கிறது.)
அக்டோபரில், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி சராசரியாக 1.62 மில்லியன் bpd ஆக இருந்தது, இது செப்டம்பரில் 1.61 மில்லியன் bpd ஆக இருந்தது. அக்டோபரில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய கச்சா எண்ணெய் 34% இருந்தது. "டிசம்பர்-ஜனவரி மாத இறக்குமதியில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படும். குறுகிய கால கொந்தளிப்பு இருந்தபோதிலும், கவர்ச்சிகரமான லாபம் மற்றும் இந்தியாவின் புவிசார் அரசியல் நிலைப்பாடு காரணமாக ரஷ்ய இறக்குமதிகள் முழுமையாக நிறுத்தப்படுவது சாத்தியமில்லை. ரஷ்ய எண்ணெய் இந்தியாவிற்கு தொடர்ந்து வரும், ஆனால் மிகவும் சிக்கலான தளவாட, நிதி மற்றும் வர்த்தக ஏற்பாடுகள் மூலம் இது நடக்கும்," என்றும் ரிடோலியா கூறினார்.
மற்ற ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது அமெரிக்க தடைகளை விதிக்கவில்லை. எனவே, கடந்த 3 ஆண்டுகளில் காணப்பட்ட அளவை விட மிகக் குறைவாக இருந்தாலும், ரஷ்ய எண்ணெயின் ஒரு பகுதி இடைத்தரகர்கள் மூலம் இந்தியாவிற்கு வரக்கூடும். 2025 ஆம் ஆண்டில் இதுவரை இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் 35% அதிகமாக ரஷ்யா பங்களித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த சமீபத்திய நடவடிக்கை, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவை கட்டாயப்படுத்தும் முயற்சியில் ஒரு பெரிய முன்னேற்றமாகும். வரலாற்று ரீதியாக, அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட ஈரான் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா தவிர்த்துள்ளது. அதேபோன்ற அணுகுமுறையை ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகாயில் நிறுவன எண்ணெயிலும் எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ரஷ்ய வரத்து குறைவதை ஈடுசெய்ய, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மத்திய கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா (பிரேசில், அர்ஜென்டினா) மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கொள்முதலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உலகின் 2-வது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோர் நாடாகும், மேலும் அதன் தேவையில் சுமார் 88% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us