/indian-express-tamil/media/media_files/2025/10/10/gold-silver-2025-10-10-21-51-18.jpg)
6 மாதத்தில் 83% லாபம்... தங்கத்தை மிஞ்சிய வெள்ளியின் அசுர வளர்ச்சி! எது சிறந்த முதலீடு?
தங்கம், வெள்ளி ஆகிய இரண்டும் காலம் கடந்த முதலீட்டுச் சாதனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், முதலீட்டாளர் குறுகிய கால அல்லது நீண்ட கால நோக்கங்களுக்காக இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகளுக்கு இடையேயான அடிப்படை வேறுபாட்டை சுருக்கமாக பார்ப்போம்.
தங்கம் (Gold)
தங்கம் பொதுவாகப் பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படுகிறது. சர்வதேசப் பொருளாதாரச் சூழலில் நிச்சயமற்ற தன்மை நிலவும்போது, மக்கள் பாதுகாப்பிற்காகத் தங்கத்தில் முதலீடு செய்வதால்,அதன் மதிப்பு அதிகரிக்கிறது. குறுகிய காலத்தில் விலை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை வழங்கக்கூடிய வரலாற்று பதிவுகளைக் கொண்டுள்ளது. நகைகளாகவும், நாணயமாகவும், பாண்டுகளாகவும் வாங்கலாம். தேவைப்பட்டால் எளிதில் பணமாக்கலாம் அல்லது அடகு வைக்கலாம்.
வெள்ளி (Silver)
வெள்ளி தங்கத்தைப் போலன்றி, தொழில்துறை பயன்பாட்டில் அதிகப் பங்கை வகிக்கிறது. சூரிய ஆற்றல் பலகைகள், மின்னணு சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. எனவே, தொழில்துறை தேவை அதிகரிக்கும்போது வெள்ளியின் மதிப்பும் உயரும். தங்கம் போலன்றி, வெள்ளி விலைக் குறைவில் இருக்கும்போது வாங்குவது, எதிர்காலத் தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்து அதிக லாபத்தைத் தரக்கூடும். வெள்ளியானது தங்கத்தை விட அதிக விலை ஏற்ற இறக்கங்களுக்கு (Volatility) உட்பட்டது.
எது சிறந்த முதலீடு: தங்கமா? வெள்ளியா?
இந்த ஆண்டு (2025)ஏப்ரல் 2-ம் தேதி வெள்ளி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனையானது. 10 கிராம் ரூ.9,800-க்கு விற்றது. இன்றைய நிலவரப்படி, அக்.10 அன்று ஒரு கிராம் ரூ.180-க்கு விற்பனையாகிறது. 100 கிராம் என்பது ரூ.18,000-க்கு விற்கப்படுகிறது. ஏப்ரலில் 100 கிராம் வெள்ளி வாங்கி இருந்தால் இன்றைக்கு, 83% லாபமாக அதாவது ரூ.8,200 கிடைத்திருக்கும்.
இதேபோல், இந்த ஆண்டு (2025)ஏப்ரல் 2-ம் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.8,980-க்கு விற்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி (அக்.10) ஒரு கிராம் ரூ.11,260-க்கு விற்கப்படுகிறது. தங்கம் கிராமுக்கு 20% அதிகரித்து ரூ.2,280 லாபமாக கிடைத்திருக்கும். எனவே, பாதுகாப்பு மற்றும் அதிக லாபம் (குறுகிய/நடுத்தர காலம்) வேண்டுமானால் தங்கம் சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால், அதிக அளவில் (Bulk) முதலீடு செய்ய, மற்றும் எதிர்காலத் தொழில்துறை வளர்ச்சியை நம்பி முதலீடு செய்ய வெள்ளி சிறந்தது. மேலும், ஜப்பானின் பிரபல பொருளாதார நிபுணர் ராபர்ட் கியோஸாகி, வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1.40 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயரும் என்று கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வெள்ளியின் எதிர்கால மதிப்பு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.