/indian-express-tamil/media/media_files/2025/04/02/LMD4RNN2Qj1g93Wzocf4.png)
சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், செட்டிநாடு பகுதிகளில் சுற்றுலா தொழில் மேற்கொள்ள விரும்பும் தனியார் நில உரிமையாளர்கள் மற்றும் பாரம்பரிய அரண்மனை வடிவ வீடுகளின் உரிமையாளர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி அழைப்பு விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் வேளாண்மை, புவிசார் சிறப்புகள், புராதனக் கட்டிடக்கலை, செழுமையான பாரம்பரிய கலாச்சாரம் ஆகியவற்றால் புகழ்பெற்றதாகும். ஆன்மீக தளங்கள் மற்றும் செட்டிநாடு சுற்றுலா தலங்களை முன்னிறுத்தி, வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக நாட்கள் தங்கும் வகையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, காரைக்குடி, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், பள்ளத்தூர், கோட்டையூர், புதுவயல் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா ஹோட்டல்கள், ரிசார்ட்ஸ், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் மூலம் விருந்தோம்பல் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், தனியார் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்தோடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
செட்டிநாடு பகுதிகளில் சுற்றுலா தொழில் மேற்கொள்ள விரும்பும் நில உரிமையாளர்கள் மற்றும் பாரம்பரிய வீடுகளின் உரிமையாளர்கள், தற்போதைய சந்தை மதிப்பீட்டிற்கு இசைவாக விண்ணப்பிக்கலாம். இதற்காக காரைக்குடி சுற்றுலா அலுவலரை 8939896400 என்ற தொலைபேசி எண்ணிலோ, touristofficekaraiikudi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.