Advertisment

திராவிட மாடல் அரசு வணிகர்களுக்கு ஆதரவானது; கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; மதுரையில் ஸ்டாலின் பேச்சு

சமச்சீரான, எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையிலான நம்முடைய அரசின் பயணத்தில், வணிகப் பெருமக்களின் ஆதரவு மிக மிக முக்கியம்; மதுரை நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

author-image
WebDesk
New Update
Stalin madurai trade

மதுரையில் நடைபெற்ற மதுரை-தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். 

Advertisment

முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதாவது; “வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் அதை தட்டாமல், கட்டாயமாக கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பை நான் பெறுவதுண்டு. ஏனென்றால், விக்கிரமராஜா ஒரு சங்கத்தின் தலைவர் மட்டுமல்ல, வணிகர்களின் நலனுக்காக செயல்படுகின்ற ஒரு தோழர் மட்டுமல்ல; இந்தப் பொறுப்புகளை எல்லாம் கடந்து, நம்முடைய திராவிட மாடல் அரசின் நல்லெண்ணத் தூதுவராக செயல்பட்டு கொண்டிருப்பவர்.

ஏற்கனவே, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் பவள விழாவில், இங்கே உரையாற்றிய நம்முடைய ஜெகதீசன் குறிப்பிட்டது போல, இதே மதுரையில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கலந்துகொண்டார். அவரே சொன்னார், கலைஞர் பிறந்த ஆண்டும், இந்த அமைப்பு உருவான ஆண்டும் ஒரே ஆண்டுதான். அவருடைய நூற்றாண்டில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும் நூற்றாண்டு நிறைவு விழா காண்கிறது, அதற்காக நான் முதலில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், வணிகர்களுக்கு ஆதரவாக, உங்கள் நலனுக்காக செய்து வரக்கூடிய பணிகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதேபோல், நம்முடைய அரசின் முயற்சிகளுக்கெல்லாம் துணையாக இருக்கும் அமைப்பாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் ஆற்றி வரக்கூடிய பணிகள் எல்லாம் பாராட்டுக்குரியது. 
5,500 உறுப்பினர்கள், 250 இணைப்புச் சங்கங்கள் என்று இந்தியாவிலேயே பெரிய வணிகர் அமைப்பாக இருக்கும் நீங்கள், வணிகர் நலனுக்காகவும், சமுதாய நலனுக்காகவும் மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

Advertisment
Advertisement

சமச்சீரான, எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையிலான நம்முடைய அரசின் பயணத்தில், வணிகப் பெருமக்களான உங்களுடைய ஆதரவு மிக மிக முக்கியம். எங்கள் முயற்சிகளுக்கு எப்போதும் நீங்கள் துணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு மிகவும் இருக்கிறது. அதேபோல், உங்களின் வளர்ச்சிக்கும் நம்முடைய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று நான் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 

நீண்ட நேரம் பேசுவதற்கு வாய்ப்பில்லாத காரணத்தால் நான் உடனடியாக விமானத்தை பிடித்து சென்னைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு விக்கிரமராஜா அழைத்தபோது, நீங்கள் நிகழ்ச்சிக்கு வந்தால் மட்டும் போதும் என்று அழைத்தார். அவர் எப்போதும் இப்படிதான் செய்வார். அதேபோல தான் இப்போதும் செய்திருக்கிறார். வந்தவுடன் நேராக உள்ளே அழைத்து வந்து மேடையில் உட்கார வைத்துவிட்டார். பேசவும் வைத்துவிட்டார். அதனால் தான் அதிகமாக என்னால் பேச வாய்ப்பில்லை; நேரமுமில்லை. இருந்தாலும், இன்றைக்கு உங்களது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் உள்ளபடியே நான் பெருமைப்படுகிறேன்; மகிழ்ச்சியடைகிறேன். 

என்னைப் பொறுத்தவரைக்கும், மீண்டும் ஏதாவது கோரிக்கை உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஏனென்றால், எல்லா கோரிக்கையையும் நம்முடைய விக்கிரமராஜா மற்றும் இங்கு இருக்கக்கூடிய நிர்வாகிகளும் அடிக்கடி என்னை சந்தித்துள்ளனர். எப்படி பேச வேண்டுமோ, அப்படி பேசி, எப்படி வியாபாரிகள் அந்த வியாபாரத்தை அதிகப்படுத்துவதற்கு பேசி, பேசி அதை சாமர்த்தியமாக வியாபாரம் செய்வார்களோ, அதேபோல, அரசிடமும் சாமர்த்தியமாக பேசி, செய்யக்கூடிய ஆற்றல் இங்கே இருக்கக்கூடிய நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக விக்கிரமராஜா எப்போது கோட்டைக்கு வந்தாலும் சரி, ஏதாவது ஒரு காரியத்தை முடித்துவிட்டு தான் செல்வார். அப்படிப்பட்ட ஆற்றலுக்குரியவர். 

அவர் முன்னின்று இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு என்னை வரவேண்டும் என்று அழைத்து, வரவழைத்திருக்கிறார். அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி, இங்கே வைத்திருக்கக்கூடிய கோரிக்கையை பொறுத்தவரைக்கும், நிச்சயமாக, உறுதியாக அதுவும் பரிசீலிக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் சொன்னதைதான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் – அதுவும் உங்களுக்குத் தெரியும். 

அந்த உணர்வோடு, அந்த நம்பிக்கையை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

Stalin Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment