கொரோனா நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி குறைந்த வட்டி விகிதத்தில் தங்க நகைக் கடன் திட்டங்களை சனிக்கிழமை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்க நகைக் கடன்களுக்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளில் ரூ .25,000 முதல் 1,00,000 வரை கடன் தொகையைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது. ஒரு கிராம் தங்க நகைக்கு சந்தை விகிதமான ரூ.3,000 க்கு மாறாக, ஒரு கிராமுக்கு ரூ .3,300 கடன் தொகையைப் பெற முடியும் என்று அறிவித்துள்ளது. மேலும், கடனை மூன்று மாத காலத்திற்குள் திருப்பித் தர வேண்டும் என்றும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் மூலம் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் விபத்து காப்பீட்டு திட்டம் கடன் பெறுபவருக்கு இலவசமாக அளிக்கப்படும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு விவசாய விளைபொருட்கள் மீது குறைந்த வட்டியுடன் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளார். முதல்வர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், விவசாயிகள் தங்கள் பொருட்களின் சந்தை மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது ரூ.3 லட்சம் இதில் எது குறைவாக இருந்தாலும் விவசாயிகளின் விவசாய விளைபொருட்கள் மீது கடன் பெறலாம். மேலும், கடன் காலத்திற்கான காலம் 180 நாட்கள் மற்றும் கடனுக்கான வட்டி ஐந்து சதவீதம். கடனுக்கான வட்டி இல்லாத காலம் தற்போதுள்ள 30 நாட்களில் இருந்து முதல் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல்வரின் அறிக்கையில், பண்ணை விளைபொருட்களை கொடவுனில் சேமித்து வைபதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்துள்ளார். ஒழுங்குமுறை சந்தைகளில் சேமிப்பு கோடவுனுக்கு விவசாயிகள் 60 நாட்கள் வாடகை செலுத்த வேண்டியதில்லை என்றும், விவசாயிகள் 180 நாட்களுக்கு கோடவுனைப் பயன்படுத்தலாம் என்றும் முதல்வரின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, தமிழக அரசு விவசாயிகளுக்கு 30 நாட்கள் வரை தங்கள் விளைபொருட்களை கொடவுனில் இலவசமாக சேமித்து வைத்திருக்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில், இப்போது இலவச சேமிப்பு நாட்களை 60 நாட்களாக உயர்த்தியுள்ளது.
அடுத்த 15 நாட்களில் மாம்பழ உற்பத்தி அதிகரிக்கும் என்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, காய்கறிகளையும் பழங்களையும் சேமிப்பதற்கான குளிர்பதன சேமிப்பு கொடவுன்களுக்கான கட்டணம் மே மாதம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சலுகை ஏப்ரல் 30 வரை அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், நெல், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், நிலக்கடலை, இஞ்சி, தேங்காய், பருத்தி, மிளகாய், புளி, முந்திரி மற்றும் வெல்லம் ஆகியவற்றிற்கான 1 சதவீத சந்தை கட்டணம் மே மாதம் இறுதி வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.