2024-2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் தமிழக அரசு ரூ.45,000 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள மாநிலங்களின் சந்தைக் கடன் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மாநில வளர்ச்சிக் கடன்கள் (SDLs) என்ற பெயரில் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் நிதி திரட்டுகின்றன. பத்திரங்களுக்கான ஏலத்தை ரிசர்வ் வங்கி நடத்துகிறது. பத்திரங்கள் பல்வேறு தவணைகளுக்கு வழங்கப்படுகின்றன, மேலும் மாநிலங்கள் கடன் தொகைக்கான வட்டியுடன் அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, 2024-2025 ஆம் ஆண்டின் முதல் பாதி வரை, வளர்ச்சி பத்திரங்கள் மூலம் தமிழ்நாடு ரூ.50,000 கோடி நிதி திரட்டியுள்ளது. கடன்களை திருப்பிச் செலுத்திய பிறகு, மாநிலத்தின் நிகர கடன் ரூ.34,625 கோடியாக உள்ளது.
மத்திய அரசு மாநிலங்களுக்கான கடன் உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. 2023-24ல் இருந்து திட்டமிடப்பட்ட மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) கடன் பெறுவதற்கான உச்சவரம்பு 3% ஆகும். மின்துறை சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதன் மூலம் 2021-22 முதல் 2024-25 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு GSDP-யில் 0.5 சதவீதம் கூடுதல் கடன் வாங்கலாம்.
தமிழ்நாட்டின் நிலுவையில் உள்ள கடன்களில் பெரும்பகுதியானது எஸ்.டி.எல்லில் உள்ளன. ஆர்.பி.ஐ அறிக்கை படி, மார்ச் 31, 2024-ன் இறுதியில் தமிழகத்தின் மொத்த கடன் நிலுவைத் தொகைகள் ₹8,47,022.7 கோடியாகவும், மார்ச் 31, 2025-ல் ₹9,55,690.5 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.