Business news in tamil: தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (டான்சிம்) பட்டியலின மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த (எஸ்சி/எஸ்டி) தொழில்முனைவோர் தங்கள் வணிகத்தை நடத்துவதற்கும், அதிகப்படுத்துவதற்கும் நிதியுதவி எதிர்பார்க்கும் விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
"TN SC/ST" ஸ்டார்ட்அப் ஃபண்ட் என அழைக்கப்படும் இது, எஸ்.சி., எஸ்.டி நிறுவனர்களால் ஊக்குவிக்கப்படும் ஸ்டார்ட்-அப்களுக்கான பிரத்யேக நிதியாகும். முதலீட்டுக் குழுவின் மதிப்பீடு மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் பங்கு அல்லது கடன் வடிவில் முதலீடு செய்யப்பட உள்ளது.
இந்த நிதியுதவிக்கு தகுதி பெற, நிறுவனத்தின் பங்குகளில் 50% க்கும் அதிகமான பங்குகளை எஸ்.சி., எஸ்.டி பிரிவைச் சேர்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வைத்திருக்க வேண்டும். தொழில்முனைவோர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவராகவோ அல்லது தமிழ் வம்சாவளியாகவோ இருக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டிற்குள் முதன்மையான செயல்பாட்டுத் தளத்தைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எஸ்.சி., எஸ்.டி சமூகத்தினருக்காக அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது என்பதை விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றும் சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நாங்கள் பேசுவோம். தொழில் முனைவோர் என்று வரும்போது, அவர்களை ஒதுக்கி வைக்காமல், வேறு எந்த புதிய யுக நிறுவனத்துக்கும் இணையாக இருக்க வேண்டும்,” என்று தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (TANSIM) தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதன் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மாநில பட்ஜெட்டின் போது, நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், பட்டியலின மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோரின் ஸ்டார்ட் அப்களை ஆதரிக்க, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷனுக்கு ரூ.30 கோடி நிதி வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிதியுதவி பற்றிய விவரங்களை www.startuptn.in என்கிற இணைய பக்கத்தில் காணலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil