சொந்த கார் வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. குறிப்பாக இளைஞர்கள், மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு இது சிறு வயது கனவாக இருக்கும். குடும்ப வசதிக்கு ஏற்ற வகையில் சந்தையில் பல்வேறு வகை கார்கள் உள்ளன. விலை உயர்ந்த ஆடம்பர கார் முதல் பட்ஜெட் பிரிவு கார் வகை சந்தையில் பல்வேறு ரகங்கள் உள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் டாடா, கியா, மாருதி சுசுகி, ஹூண்டாய், மகேஹந்திரா உள்பட பல்வேறு முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் இந்நிறுவனங்கள் ஜனவரி 1, 2025 முதல் தங்களின் கார் விலைகளை இந்தியாவில் உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் கார் வகைக்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும் என்றும் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்வு இருக்கும் என்றும் கூறியுள்ளது.
கார்களுக்கான உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கார்கள் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் கூறின. டாடா, கியா, மாருதி சுசுகி, ஹூண்டாய், மகேஹந்திரா, எம்.ஜி, பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவை உற்பத்தி செலவு காரணமாக 2% முதல் 4% வரையில் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“