Save Tax Under Section 80D : ஒரு நிறுவனத்தில் நாம் எடுக்கும் மருத்துவக் காப்பீடு நம்முடைய மருத்துவ செலவுகளை மட்டும் கவனித்துக் கொள்வதில்லை. மாறாக நம்முடைய பணத்தையும் கூட மிச்சப்படுத்துகிறது. மருத்துவக் காப்பீட்டிற்காக நாம் கட்டும் ப்ரீமியம் தொகைக்கு வருமான வரி விலக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்காகவோ, அல்லது உங்களின் துணை மற்றும் குழந்தைகளுக்காகவோ நீங்கள் வாங்கும் மருத்துவக் காப்பீடு மூலம் உங்களால் ரூ. 25 ஆயிரம் வரை வருமான வரிச்சட்டம் பிரிவு 80டியின் கீழ் குறைக்க இயலும். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கான மருத்துவக் காப்பீட்டில் ரூ. 25 ஆயிரம் வரை வருமான வரியில் இருந்ந்து குறைத்துக் கொள்ளலாம்.
பெற்றோர்களுக்கான மருத்துவக் காப்பீடு
உங்கள் குடும்பத்தில் உங்களை நம்பி உங்களின் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் நீங்கள் மருத்துவக் காப்பீட்டினை வாங்கலாம். அப்போது ஒட்டுமொத்தமாக உங்களால் 50 ஆயிரம் வரை களைம் செய்து கொள்ள இயலும். உங்களின் துணை, குழந்தைகள் ஆகியோருக்கான டிடெக்சன் 25 ஆயிரம், உங்கள் பெற்றோர்களின் மருத்துவக் காப்பீட்டில் ரூ. 25 ஆயிரம் டிடெக்சன் என்று மொத்தம் ரூ. 50 ஆயிரம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம். இது 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோர்கள் கொண்ட குடும்பத்திற்கு பொருந்தும்.
60 வயதிற்கு மேற்பட்ட பெற்றோர்களை கொண்டது உங்களின் குடும்பம் என்றால் அவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையில் விலக்கும், உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் போல் ரூ.25 ஆயிரம் வரை விலக்கும் அளிக்கப்படும். மொத்தமாக நீங்கள் ரூ.75 ஆயிரம் வரை விலக்கு பெற்றுக் கொள்ளலாம். உங்கள் வயது அல்லது உங்கள் துணையின் வயது 60க்கு மேலாக இருந்தால், மருத்துவக் காப்பீட்டின் மூலம் நீங்கள் பெரும் வருமான வரி விலக்கு என்பது ரூ. 50 ஆயிரம் ஆகும். மேலும் உங்களின் பெற்றோர்களுக்கும் மருத்துவக் காப்பீடு இருந்தால் மொத்தமாக ரூ. ஒரு லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும்.
மேலும் படிக்க : எஸ்பிஐ கட்டண மாற்றங்கள் – இதைத் தெரிந்து கொண்டு வங்கிக்கு சென்றால் பயன் பெறலாம்
மருத்துவ பரிசோதனைகளின் மூலமாகவும் உங்களால் வருமான வரியில் இருந்து விலக்கினை பெற இயலும். ரூ. 5 ஆயிரம் முதல், சில சமயங்களில், ரூ. 30 ஆயிரம் வரையிலும் உங்களால் இந்த வருமான வரி விலக்கினை பெற்றுக் கொள்ள இயலும்.