/indian-express-tamil/media/media_files/2025/08/29/aalim-hakim-2025-08-29-19-43-23.jpg)
ஒரு ஹேர் கட்-க்கு ரூ.1 லட்சம்: ரஜினி முதல் தோனி, விராட் கோலி வரை... இந்தியாவின் நம்பர் 1 ஹேர் ஸ்டைலிஸ்ட்!
விராட் கோலி, தோனி, ரன்பீர் கபூர், ரஜினிகாந்த் என திரையில் மின்னும் நட்சத்திரங்களின் ஸ்டைலான தோற்றத்திற்குப் பின்னால் ஒரே ஒரு மனிதர் இருக்கிறார். ஒரு சினிமா ஷூட்டிங் ஆகட்டும், அல்லது ஒரு பெரிய நிகழ்ச்சி ஆகட்டும், முதலில் இவருக்குத்தான் கால் போகும். அவர் யார் தெரியுமா?
இந்தியாவின் மிகப் பிரபலமான ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹகீம். இவர்தான் இந்தியாவின் 'காஸ்ட்லியான' ஹேர் ஸ்டைலிஸ்ட். ஒருமுறை முடி வெட்டுவதற்கு இவர் வாங்கும் கட்டணம் 1 லட்சம் ரூபாய். இத்துடன் ஜி.எஸ்.டி. தனியாக ரூ.18,000 செலுத்த வேண்டும். இவ்வளவு செலவானாலும், பிரபலங்கள் இவரைத் தேடித்தான் செல்கிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய 'கூலி' திரைப்படத்திற்கு ஹேர் ஸ்டைல் செய்தது இவர்தான். கடந்த ஆண்டு நடந்த ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்ட திருமணத்திலும், அம்பானியின் ஹேர் ஸ்டைலுக்குப் பொறுப்பு வகித்தவர் இவரே. இவருக்காக பிரபலங்கள் மணிக்கணக்கில் காத்திருந்து முடி வெட்டிக்கொள்வது ஆலிம் ஹகீமின் திறமைக்கு ஒரு சான்று.
வெற்றிக்குப் பின்னால் சோகமான கதை:
ஹகீம் இந்த இடத்திற்கு அவ்வளவு எளிதாக வரவில்லை. இவரது வாழ்க்கையில் நிறைய சோகங்களும், கடின உழைப்பும் அடங்கியுள்ளன. மகாராஷ்டிராவில் பிறந்த இவரது தந்தை, பிரபல பாலிவுட் நட்சத்திரங்களுக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக இருந்தவர். ஹகீமுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, அவரது தந்தை திடீரென இறந்துபோனார்.
குடும்பம் நிலை குலைந்து போனது. அப்போது, குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேறு வழியின்றி, 10 வயதில் முதன்முதலாக கத்திரிக்கோலை கையில் எடுத்தார் ஹகீம். தனது தாயாரின் வழிகாட்டுதலின்படி, வீட்டின் பால்கனியில் ஒரு சிறிய சலூன் அமைத்து தொழில் தொடங்கினார். படிப்படியாக வளர்ந்து, கலை நிகழ்ச்சிகளுக்கு வரும் கலைஞர்களுக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறினார். இவரது திறமையைக் கண்டறிந்த லாரியல் நிறுவனம், இவரை வெளிநாடுகளுக்கு அனுப்பி ஹேர் ஸ்டைலிங் படிப்புகளைக் கற்க வைத்தது. இதுதான் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இன்று, ஆலிம் ஹகீம் ஒரு ஹேர் கட் செய்ய ஒரு லட்ச ரூபாய் கட்டணம் வாங்கினாலும், ஒரு திரைப்பட ஷூட்டிங்கிற்கு குறைந்தபட்சம் 15 லட்சம் ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார். சில சமயங்களில் ஒருமுறை சந்தித்து முடி வெட்டிக்கொள்ள 5 லட்சம் ரூபாய் வரை கொடுக்கும் பிரபலங்களும் இருக்கிறார்கள்.
விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், மகேஷ்பாபு என இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் பலர் இவரது வாடிக்கையாளர்களாக உள்ளனர். கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் யாரும் வாழ்க்கையில் உச்சத்தை அடையலாம் என்பதற்கு ஆலிம் ஹகீம் ஒரு சிறந்த உதாரணம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.