ஒரு காலத்தில், 1 கோடி ரூபாய் சேர்ப்பது என்பது மிக கடினமான காரியமாக இருந்தது. ஆனால், கூட்டு வட்டி (compounding) என்ற சூட்சுமத்தைப் புரிந்துகொண்டவர்கள், அந்த இலக்கை விரைவாக எட்டி, நிதிச் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால், இந்தப் பயணத்தின் முதல் சில வருடங்கள் சவாலானவை. ஏன் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
முதல் கோடி ரூபாய் சேர்வது ஏன் மிகக் கடினம்?
நீங்கள் 1 கோடி ரூபாயை 12% வருடாந்திர வட்டியுடன் முதலீடு செய்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். முதல் ஒரு கோடியில் இருந்து 2வது கோடி ரூபாய்க்கு உயர கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகும். ஆனால், உங்கள் முதலீட்டு மதிப்பு உயர உயர, அடுத்தடுத்த கோடிகளை சேர்க்க ஆகும் காலம் வெகுவாகக் குறைகிறது.
ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடிக்கு - 6 வருடங்கள்
ரூ.2 கோடியிலிருந்து ரூ.3 கோடிக்கு - 3.5 வருடங்கள்
ரூ.3 கோடியிலிருந்து ரூ.4 கோடிக்கு - 2.5 வருடங்கள்
ரூ.4 கோடியிலிருந்து ரூ.5 கோடிக்கு - 2 வருடங்கள்
ரூ.5 கோடியிலிருந்து ரூ.6 கோடிக்கு - 1.5 வருடங்கள்
ரூ.9 கோடியிலிருந்து ரூ.10 கோடிக்கு - 1 வருடம்
இதனை பார்க்கும்போது, ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. ஆரம்பத்தில், உங்கள் முதலீடு மெதுவாக வளரும். ஆனால், குறிப்பிட்ட ஆண்டுக்கு பிறகு, உங்கள் பணம் பன்மடங்கு வேகமாக வளரத் தொடங்கும். இதுதான் கூட்டு வட்டியின் உண்மையான சக்தி.
கூட்டு வட்டியின் மாயாஜாலம்:
நீங்கள் ரூ.10 லட்சத்தை 12% வருடாந்திர வட்டி விகிதத்தில் முதலீடு செய்து, அதை 30 ஆண்டுகளுக்கு அப்படியே விட்டுவிடுகிறீர்கள் என வைத்து கொள்வோம்.
1ம் ஆண்டு: ரூ.11.2 லட்சம்
10ம் ஆண்டு: ரூ.31 லட்சம்
20ம் ஆண்டு: ரூ.96.5 லட்சம்
25ம் ஆண்டு: ரூ.1.7 கோடி
30ம் ஆண்டு: ரூ.3 கோடி
ஆரம்பத்தில் முதலீடு செய்த ரூ.10 லட்சம் தவிர, நீங்கள் ஒரு ரூபாய்கூட கூடுதலாக சேர்க்கவில்லை. ஆனால், 30 வருடங்களின் முடிவில், உங்கள் பணம் பல கோடிகளை எட்டுகிறது.
மக்கள் ஏன் விரைவாக கைவிடுகிறார்கள்?
பெரும்பாலான முதலீட்டாளர்கள், முதல் 5 ஆண்டுகளுக்குள்ளேயே தங்கள் முதலீடுகளை கைவிட்டுவிடுகிறார்கள். ஆரம்பத்தில் மெதுவாக இருக்கும் வளர்ச்சியைப் பார்த்து பொறுமையிழந்து, விரைவாக லாபம் ஈட்டக்கூடிய வழிகளைத் தேடிச் செல்கிறார்கள். கூட்டு வட்டி என்பது முதல் அத்தியாயம் சலிப்பை ஏற்படுத்தும். நீங்கள் பொறுமையாக காத்திருந்தால் மட்டுமே, இறுதியில் அதன் பிரமாண்டத்தை அனுபவிக்க முடியும்.
20 வயதில் மாதம் ரூ.2,000 முதலீடு செய்வது, 40 வயதில் மாதம் ரூ.20,000 முதலீடு செய்வதைவிட அதிக பலன் தரும். முதலீடுகளை பாதியிலேயே நிறுத்திவிடாதீர்கள். அது அதன் வளர்ச்சியைப் பாதிக்கும். ஒவ்வொரு முறை நீங்கள் பணத்தை எடுக்கும்போதும், வட்டி வளர்ச்சியின் சுழற்சியை நீங்கள் குறுக்கிடுகிறீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும்போது, மாதந்தோறும் முதலீடு செய்யும் எஸ்ஐபி (SIP) தொகையை 10% உயர்த்துங்கள். நிலையான 12% வருவாய், ஆபத்தான 20% வருவாயைவிட சிறந்தது.
சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் கணிக்க முயற்சிப்பது சாத்தியமற்றது. முதலீட்டை தாமதப்படுத்துவது ஒவ்வொரு வருட தாமதமும் லட்சக் கணக்கில் இழப்பை ஏற்படுத்தும். சந்தை எப்போதும் ஏறும், இறங்கும். பதற்றப்படாமல் பொறுமை காக்க வேண்டும். பணவீக்கத்தை புறக்கணிப்பது உங்கள் பணம், விலை உயர்வைவிட வேகமாக வளர வேண்டும். முட்டைகள் அனைத்தையும் ஒரே கூடையில் வைப்பதை போல, அனைத்து முதலீடுகளையும் ஒரே இடத்தில் வைக்காதீர்கள்.
கூட்டு வட்டி என்பது, சிறிய பனி பந்து மலையிலிருந்து உருண்டு வரும்போது, அது பெரிதாகி, தடுக்க முடியாத சக்தியாக மாறுவதை போன்றது. முதல் சில லட்சம் ரூபாயைச் சேர்ப்பது கடினமாக இருக்கும். ஆனால், 1 கோடி ரூபாயை எட்டிய பிறகு, அடுத்தடுத்த கோடிகள் வேகமாக சேரும். எனவே, உங்கள் முதலீட்டுப் பட்டியல் மெதுவாக வளர்கிறது என்று நீங்கள் கவலைப்பட்டால், பொறுமையாக இருங்கள். அதன் மாயாஜாலம் தொடங்க இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். ஏனென்றால், கூட்டு வட்டியின் உலகில், பொறுமை என்பது நல்ல குணம் மட்டுமல்ல, அதுவே ஒரு சிறந்த செல்வ உத்தியும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.