மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 28 வயது பெண், தன் வீட்டு பால்கனியில் 'சன்செட் டீ' நடத்தி, புதிய டிரெண்ட்டை உருவாக்கியுள்ளார். இது சாதாரண வியாபாரம் அல்ல; எம்.பி.ஏ. பட்டம் இல்லை, பெரிய முதலீடு இல்லை, ஆன்லைன் டெலிவரி ஆப்ஸும் இல்லை. ஆனாலும், மாதம் ரூ.1.2 லட்சம் சம்பாதிக்கிறார். ஐடியா இவ்வளவு சிம்பிளா? அந்தப் பெண்ணின் வெற்றிக்குக் காரணம் என்ன?
4x9 அடி கொண்ட தனது வீட்டு சிறிய பால்கனியிலேயே இந்த வியாபாரம் நடக்கிறது. ஒவ்வொரு அமர்விலும் 6 முதல் 8 பேர் அவர்களுக்குப் பாரம்பரிய டீ வகைகளும், வீட்டிலேயே செய்யப்பட்ட பலகாரங்களும் பரிமாறப்படுகின்றன. இங்கு வருபவர்களுக்கு டீயை விட, கதைகள்தான் முக்கியம். விருந்தினர்களுடன் உள்ளூர் கதைகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார். ஒரு நபருக்கு ரூ.1,400 முதல் ரூ.2,000 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாரத்திற்கு 3 முதல் 4 அமர்வுகள் நடத்துவதன் மூலம், இந்த வருமானம் கிடைக்கிறது.
இந்த வியாபாரத்திற்கு அவர் ஒரு ரூபாய் கூட விளம்பரத்திற்குச் செலவு செய்யவில்லை. கூகுள் மேப்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாகவே வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார். "மக்கள் டீ குடிக்க வருகிறார்கள், ஆனால், அவர் சொல்லும் கதைகள் மற்றும் நிம்மதியான சூழலுக்காகவே அங்கேயே தங்கிவிடுகிறார்கள்" என்று சமூக வலைத்தளங்களில் இவரது கதை வைரல் ஆகி வருகிறது. இதுபோன்ற தனித்துவமான பால்கனி அனுபவங்கள் இப்போது பல நகரங்களில் வளர்ந்து வருகின்றன. கலை, கவிதை, இசை, சமையல் நிகழ்ச்சிகள் என பால்கனி இனி துணி காயவைக்கும் இடம் மட்டுமல்ல, புதிய கலாச்சார மையமாக உருவெடுத்து வருகிறது.
/indian-express-tamil/media/post_attachments/093b5a5f-946.png)
சமூக வலைத்தளங்களில் சிலர் இந்த முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்தாலும், ஒருசிலர் "ஒருவர் பால்கனியில் டீ குடிக்க ஏன் ரூ.1,500 கொடுக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. செல்போன், கம்ப்யூட்டர் என இயந்திரமயமான வாழ்க்கையில் இருந்து தப்பித்து, மனிதர்களுடன் நேரடியாகப் பேசும் நிம்மதியான அனுபவத்தைத்தான் மக்கள் தேடுகிறார்கள் என்பது புரிகிறது.