/indian-express-tamil/media/media_files/2025/05/09/oMgPWfD7fVHj5qlrUXge.jpg)
மாதம் 30,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நபர், ஒரு கோடி ரூபாய் சேமிக்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இன்றைய காலகட்டத்தில் பணம் சேமிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், அதை எப்படி சரியான முறையில் முதலீடு செய்வது என்பதையும் இதில் காணலாம்.
இதற்காக முதலில் திட்டமிடல் மிக அவசியம். அதன்படி, நம்முடைய மாத வருமானம் குறித்து நாம் எந்த அளவிற்கு தெரிந்து வைத்திருக்கிறோமோ, அதே அளவிற்கு நம்முடைய செலவினங்கள் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது பணத்தை சரியான முறையில் செலவளிக்க உதவும்.
உதாரணத்திற்கு உங்களுடைய மாத வருமானம் ரூ. 30 ஆயிரம் என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்காக உங்களுடைய தங்கும் விடுதி மற்றும் உணவிற்காக ரூ. 7 ஆயிரம் செலவாகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். போக்குவரத்து செலவிற்கு ரூ. 1000 என்று எடுத்துக் கொள்ளலாம். அத்தியாவசிய தேவைகளுக்காக ரூ. 2200 செலவாகிறது என்று கருதலாம். இது மட்டுமின்றி இதர செலவுகளுக்காக ரூ. 3000 மற்றும் மருத்துவ காப்பிடுக்காக ரூ. 700 செலவளிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். இது போக டெர்ம் இன்ஷுரன்ஸ்-காக ரூ. 600 செலுத்த வேண்டும்.
இந்த வகையில் பார்த்தால் ஒரு நபரின் மொத்த செலவு ரூ. 15 ஆயிரமாக இருக்கும். இவ்வாறு பார்த்தால் உங்களுடைய வருமானத்தில் இருந்து ரூ. 15 ஆயிரத்தை சேமிக்க முடியும். இந்த ரூ. 15 ஆயிரத்தை கொண்டு அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ. 75 லட்சம் வரை நம்மால் உருவாக்க முடியும். அந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு, ரூ. 15 ஆயிரத்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
எடுத்துக்காட்டாக, 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 15 ஆயிரத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், 12 சதவீதம் வட்டி ஆண்டுதோறும் கிடைக்கும். இதன் மூலம் நம்முடைய முதலீட்டு தொகை ரூ. 27 லட்சமாக இருக்கும். 15 ஆண்டுகளில் வட்டியின் மூலமாக ரூ. 48.68 லட்சம் இருக்கும். மொத்தமாக சேர்த்துப் பார்த்தால் ரூ. 75.68 லட்சம் நம்மிடம் இருக்கும்.
இதை விட அதிகமான பணத்தை ஈட்ட நினைத்தால், நம்முடைய முதலீட்டு தொகையை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதமாக முதலீடு செய்யலாம். முதல் ஆண்டில் ரூ. 15 ஆயிரம் முதலீடு என்றால், அடுத்த ஆண்டில் ரூ. 16500, அதற்கு அடுத்த ஆண்டில் ரூ. 18150 என முதலீடு செய்யலாம். இவ்வாறு 15 ஆண்டுகளுக்கு செய்தால், இறுதியில் ரூ. 1.29 கோடி நமக்கு வருமானமாக கிடைக்கும்.
நன்றி - Boss Wallah (Tamil) Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.