/indian-express-tamil/media/media_files/2025/06/01/PoamgA5kOsaWS0fNgouP.jpg)
இன்றைய உலகில், ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் என்பது தனிநபர்களின் நிதி பயன்பாட்டின் முக்கிய அடையாளமாக மாறியுள்ளது. வீட்டுக் கடன், தனிநபர் கடன் அல்லது வேறு எந்த நிதி இலக்குகளுக்கும் ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் மிக அவசியம். பொறுப்புணர்வுடன் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதன் மூலமும், சரியான நேரத்தில் பில்களை செலுத்துவதன் வாயிலாகவும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை கணிசமாக மேம்படுத்த முடியும். உங்கள் கிரெடிட் அறிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதும், பழைய கணக்குகளை ஆக்டிவாக வைத்திருப்பதும் உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு நேர்மறையான பங்களிப்பை அளிக்கும்.
கிரெடிட் கார்டுகள் பொறுப்புடன் பயன்படுத்தப்படும்போது, உங்கள் கிரெடிட்டை உருவாக்கவும், மேம்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஒரு நீண்ட மற்றும் விரிவான செயல்முறையாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த நீங்கள் ஒரு பொறுப்பான கடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே இதன் மையக்கருத்து.
கிரெடிட் கார்டை பயன்படுத்தி உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான எளிய வழிகள்:
1. சரியான நேரத்தில் பணம் செலுத்துவதன் முக்கியத்துவம்:
உங்கள் கிரெடிட் ஸ்கோரை நிர்ணயிப்பதில் உங்களுடைய கட்டண வரலாறு ஒரு பெரிய காரணியாகும். ஒவ்வொரு மாதமும் உங்கள் கிரெடிட் கார்டு பில்லை சரியான நேரத்தில் அல்லது அதற்கு முன்பாகவே செலுத்துவது, நீங்கள் ஒரு பொறுப்பான நுகர்வோர் என்பதைக் காட்டவும், சிறந்த கிரெடிட் ஸ்கோரைப் பெறவும் உதவும்.
2. குறைந்த கடன் பயன்பாட்டு விகிதம் (Credit Utilization low Ratio):
உங்கள் கிரெடிட் வரம்பில் 30% க்கும் குறைவாகவே அதன் விகிதத்தை வைத்திருக்க முயற்சிக்கவும். அதிக கடன் பயன்பாடு, நீங்கள் கடனை அதிகம் சார்ந்துள்ளீர்கள் என்பதைக் குறிக்கும். இது உங்கள் ஸ்கோரை பாதிக்கலாம். உங்கள் செலவுகளை கண்காணிப்பதும், ஒரு பில்லிங் சுழற்சியில் பலமுறை பணம் செலுத்துவதும் இந்த விகிதத்தை குறைவாக பராமரிக்க உதவும்.
3. குறைந்தபட்ச தொகையை விட அதிகமாக செலுத்துங்கள்:
குறைந்தபட்ச தொகையை செலுத்துவது உங்கள் கணக்கை ஆக்டிவாக வைத்திருந்தாலும், அது நீங்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டியையும் சேர்க்கிறது. கடனை முழுவதுமாக செலுத்துவது, வட்டி செலுத்துவதிலிருந்து உங்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், நல்ல கடன் பழக்கவழக்கத்தின் அறிகுறியாகவும் கருதப்படுகிறது.
4. கிரெடிட் கார்டுகளை ஆக்டிவாக வைத்திருங்கள்:
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத பழைய கிரெடிட் கார்டுகளை ஆக்டிவாக வைத்திருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. பழைய கிரெடிட் கணக்குகளை திறந்தே வைத்திருப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவை உங்கள் கிரெடிட் கணக்குகளின் சராசரி காலத்தை அதிகரிக்கின்றன.
5. உங்கள் கிரெடிட் சுயவிவரத்தை பன்முகப்படுத்துங்கள்:
கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் கார் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கிரெடிட்டுகளை வைத்திருந்தாலும், அனைத்து கடன்களும் சரியாக நிர்வகிக்கப்படும் வரை உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தலாம்.
6. உங்கள் கிரெடிட் அறிக்கைகளை கண்காணிக்கவும்:
உங்கள் கிரெடிட் அறிக்கைகளை தவறாமல் பார்ப்பது, உங்கள் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய பிழைகள் அல்லது மோசடி நடவடிக்கைகளை எளிதாக அடையாளம் காண உதவுகிறது. உங்கள் கிரெடிட் தகவல் துல்லியமாக இருப்பதை உறுதிப்படுத்த, முரண்பாடுகளை உடனடியாகப் புகாரளிக்க வேண்டும்.
முடிவாக, ஒரு கிரெடிட் ஸ்கோரை உருவாக்குவது என்பது ஒழுக்கம் மற்றும் நல்ல நிதி பழக்க வழக்கங்களை உள்ளடக்கிய செயல்முறையாகும். கிரெடிட் கார்டுகளை பொறுப்புடன் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் கிரெடிட் சுயவிவரத்தை உருவாக்கி மேம்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.