அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் நிலவும் குழப்பம்! வாடிக்கையாளர்கள் கடும் அவதி!

விரும்பிய கட்டண சேனல்களை பார்ப்பதற்கு தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது

தமிழகத்தில் டிராய் விதிகளின்படி விரும்பிய சேனல்களை தேர்வு செய்யும் திட்ட அவகாசம் முடிந்து, சாதாரண ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், செட்-டாப் பாக்ஸ் முழுமையாக வழங்கப்படாதது, சேனல்களின் அதிகக் கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் 70 சதவிகித வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழகத்தில், அரசு கேபிள் டிவி மூலம், சுமார் 100 சேனல்கள், மாதம் ரூ.70 என்ற குறைந்த கட்டணத்தில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இதில், உள்ளூர் ஆப்ரேட்டர்களுக்கு ரூ.50, அரசு கேபிள் நிறுவனத்திற்கு ரூ.20 வீதம் கட்டணமாகக் கிடைத்தன. அனைத்து மாவட்டங்களிலும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மூலம் சுமார் 70 லட்சம் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கியதன் மூலம் இந்த சேவை சாத்தியமானது.

இதனிடையே, சாதாரண ஒளிபரப்பிற்கு பதிலாக, டிஜிட்டல் தரத்துடன் தொலைக்காட்சி சேனலை ஒளிபரப்பும் வகையில், அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் கடந்த 6 மாதங்களாக இலவச செட்-டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை பெரும்பாலான கேபிள் ஆப்ரேட்டர்களும், வாடிக்கையாளர்களும் பயன்படுத்தவில்லை.

மொத்தமுள்ள 70 லட்சம் இணைப்புகளில், 38 லட்சம் இணைப்புகளுக்கு ஆப்ரேட்டர்கள் மூலம் செட்-டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த திட்டத்தில், செட்-டாப் பாக்ஸுக்கு ரூ.500 முதல் ரூ.1000,  சேனல் கட்டணத் தொகை குறைந்தபட்சம் ரூ.175 முதல் ரூ.220 என ஆப்ரேட்டர்கள் மூலம் வசூலிக்கப்படுவதால், இதனை பயன்படுத்த பெரும்பாலான மக்களும் முன்வரவில்லை.

இந்நிலையில், சேனல் ஒளிபரப்பை ஒழுங்குப்படுத்தும் நோக்கில், மக்கள் அவர்கள் விரும்பிய சேனல்களை, அவர்கள் விருப்பம் போல் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் ஒளிபரப்ப வேண்டும் என டிராய் உத்தரவிட்டது.

ஜனவரி.1 முதல் அமலாக்கப்பட்ட இந்த உத்தரவின் படி, குறைந்தபட்சம் 100 இலவச சேனல்களுடன், ஆரம்பக் கட்டணம் ரூ.130 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து ரூ.153 குறைந்தபட்ச கட்டணமாக விதிக்கப்படுகிறது. இதனுடன், விரும்பிய கட்டண சேனல்களை பார்ப்பதற்கு தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பில். அரசின் உத்தரவு வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் வழங்கும் செட்-டாப் பாக்ஸ்கள் 70 சதவிகிதம் போய்ச் சேராததும், சாதாரண சிக்னல் ஒளிபரப்பு சேவை நிறுத்தம், கட்டண சேனல்களின் அதிகக் கட்டணங்கள், இணைய வழியில் விரும்பும் சேனல்களை தேர்வு செய்யும் வழிமுறை, மக்களிடம் நிலவும் தெளிவில்லாத சூழல், கேபிள் ஆப்ரேட்டர்களின் முரண்பாடுகள் போன்ற காரணங்களால் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு பெரும் சிக்கலை சந்தித்துள்ளது.

இதனால், கேபிள் டிவியை நம்பியுள்ள 70 சதவிகித வாடிக்கையாளர்கள், தற்போது முக்கிய சேனல்களின் ஒளிபரப்பை பார்க்க முடியாமல் தவிப்பில் உள்ளனர்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close