வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை நோக்கி நகர்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. கடும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.
மழையின் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வர வேண்டிய காய்கறிகளின் வரத்தும் பெருமளவு குறைந்தது. குறிப்பாக, நேற்றைய தினம் ஒரு கிலோ தக்காளி சுமார் ரூ. 120-க்கு விற்பனையானதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரத்து 300 டன் அளவிற்கு தக்காளி வரத்து இருக்கும். ஆனால், நேற்று 800 டன் மட்டுமே தக்காளி வரத்து இருந்ததால், விலையேற்றம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்றைய தினம் போதுமான அளவு தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்து காணப்படுகிறது. அதன்படி, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 70-க்கும், சில்லறை கடைகளில் சுமார் ரூ. 80 முதல் ரூ. 85-க்கு விற்பனையாகிறது. தக்காளியைத் தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்து காணப்படுகிறது.
விண்ணைத் தொட்ட தக்காளியின் விலை தற்போது குறைந்துள்ளதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.