தமிழகம் முழுவதும் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை திடீரென உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இரண்டாம் பயிர் சாகுபடி முடிவடைந்த நிலையில், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், சென்னையில் தக்காளி விலை கிலோ ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.
மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, மேலும் வரும் நாட்களில் விலை கிலோ 100 ரூபாயைத் தொடும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தைக்கு கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து தினமும் 60 முதல் 70 லாரிகள் தக்காளி வரத்து வந்ததால் கிலோ ரூ.30 முதல் 35 வரை விற்கப்பட்டது.
இரண்டாம் பயிர் சாகுபடி முடிவடைந்ததால், அண்டை மாநிலங்களில் உற்பத்தி வெகுவாக குறைந்து, தற்போது 40 முதல் 45 வாகனங்களில் மட்டுமே தக்காளி வரத்து வருகிறது. அதனால், ஒரு வாரத்தில் இரண்டு மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ.70-80 ஆக உள்ளது எனத் தெரிவித்தனர்.
கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் பி.சுகுமாரன் கூறுகையில், "புரட்டாசி மாதம் என்பதால் தக்காளி விற்பனை அதிகரித்தது. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வுக்கு இது ஒரு காரணம்.
அடுத்த வாரம் முதல் மற்ற காய்கறிகளின் வரத்து அதிகரிக்கலாம், ஆனால் தக்காளி வரத்து வர ஒரு சில நாட்கள் ஆகும். ஏனெனில் சமீபத்தில் தான் மூன்றாவது பயிர் சாகுபடி தொடங்கி உள்ளதால் தக்காளி வர அவகாசம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“