ஸ்மாப் ஃபைனான்ஸ் வங்கிகளில் இருந்து தற்போது வரை வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. ஆபத்து இல்லாத வகையில் முதலீட்டிற்கு நல்ல லாபம் கொடுப்பதால், பெரும்பாலான மக்கள் வைப்பு நிதியை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் ஏறத்தாழ 8 சதவீதத்திற்கும் மேல் வட்டி விகிதம் இருக்கும் வைப்பு நிதி திட்டங்கள் கொண்ட வங்கிகளின் பட்டியலை இதில் காணலாம்.
ஓராண்டு வைப்பு நிதி திட்டம்:
ஓராண்டு வைப்பு நிதி திட்டத்தில் 8 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமாக வட்டி விகிதம் கொடுக்கும் சில வங்கிகளின் பட்டியலை முதலில் காணலாம்.
அதன்படி, பந்தன் வங்கி, இக்யூடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, உஜ்ஜிவான் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, உத்கார்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவை வைப்பு நிதி திட்டத்தில் 8 சதவீத வட்டி கொடுக்கின்றன. இதில் பந்தன் வங்கியில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் 8.05 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
மூன்று ஆண்டுகள் வைப்பு நிதி திட்டம்:
மூன்று ஆண்டுகள் வைப்பு நிதி திட்டம் என்பது பலரது விருப்பத் தேர்வாக அமைகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள், கணிசமான அளவு வருமானத்தை இதில் பெற முடியும்.
அந்த வகையில், நார்த்ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, உத்கார்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, எஸ்.பி.எம் வங்கி, டி.சி.பி வங்கி மற்றும் பந்தன் வங்கி ஆகியவை அதிக வட்டி கொடுக்கின்றன. இதில், நார்த்ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தரப்பில் இருந்து 8.75 சதவீத வட்டி கிடைக்கிறது.
அதனடிப்படையில், வங்கிகளில் இருந்து கிடைக்கும் துல்லியமான வட்டி விகிதங்களை தற்போது தெரிந்து கொள்வோம். நார்த்ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் மூன்று ஆண்டு வைப்பு நிதி திட்டத்தில் 8.75 சதவீதம் வட்டி கிடைக்கிறது. சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் ஐந்து ஆண்டுகளுக்கு 8.60 வட்டி கிடைக்கிறது.
யூனிட்டி ஸ்னால் ஃபைனான்ஸ் வங்கியில் 1001 நாட்களுக்கான வைப்பு நிதிக்கு 8.60 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. உத்கார்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் மூன்று ஆண்டுகள் வைப்பு நிதிக்கு 8.50 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. இதேபோல், ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் மூன்று ஆண்டுகள் வைப்பு நிதிக்கு 8.25 சதவீத வட்டி வருகிறது.
இது தவிர ஏ.யு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் முறையே 18 மாதங்கள் மற்றும் 444 நாட்களுக்கான வைப்பு நிதிகளுக்கு 7.75 சதவீத வட்டி கிடைக்கிறது.
நார்த்ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 5 ஆண்டு வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகபட்சமாக 9 சதவீத வட்டியும், சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 8.60 வட்டியும் கிடைக்கிறது.
அதனடிப்படையில், உங்களது தேவை மற்றும் முதலீட்டு காலத்தை கருத்திற்கொண்டு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.