/indian-express-tamil/media/media_files/2025/04/21/CfK9cm3LmOhZpCsY56FM.jpg)
நிலையான வருமானம் எந்த அளவிற்கு முக்கியமோ அதை விட நிலையான சேமிப்பு மிக முக்கியமானது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது. குறிப்பாக, நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை மக்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
எனவே, கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சரியான சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். சேமிப்பு என்பது அனைத்து பாலினத்தவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், இதில் பெண்களிடையே அதிக விழிப்புணர்வு இருக்கிறது. ஆண்கள் எந்த அளவிற்கு பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கிறார்களோ பெண்களும் அதே அளவிற்கு பொருளாதார சுதந்திரத்துடன் இருக்க வேண்டும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில சேமிப்பு திட்டங்களின் தகவல்கள் இந்த தொகுப்பில் அடங்கியுள்ளன. இந்த முதலீடு திட்டங்களில் அதிகமான ரிஸ்க் இல்லாததால், பலரது விருப்ப தேர்வாக இது அமைகிறது. இந்தப் பட்டியலின் முதலிடத்தில் நிலையான வைப்பு நிதி என்று கூறப்படும் ஃபிக்சட் டெபாசிட் இடம்பெறுகிறது. இந்த திட்டத்தில் அரசு வங்கிகளில் சுமார் 7 முதல் 9 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதில் மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதல் வட்டி அளிக்கும் சலுகையும் உள்ளது. ஆபத்து இல்லாத முதலீடு திட்டம் எதிர்பார்ப்பவர்களுக்கு, இது ஏற்றதாக அமையும்.
இதற்கு அடுத்தபடியாக, தங்க சேமிப்பு திட்டம் இருக்கிறது. எந்த சூழலிலும் மதிப்பு குறையாத முதலீடாக தங்கம் பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை அதிகரிப்பதையும் சமீப நாட்களாக அடிக்கடி பார்த்து வருகிறோம். அதன்படி, பாதுகாப்பான நகைக்கடைகளில் சேமிப்பு திட்டத்தில் இணையலாம். திருமணத்திற்காக பணம் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த திட்டத்தின் மூலம் தங்கமாக சேமிக்கலாம்.
பங்குச்சந்தையில் கோல்ட் ETF-கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றை ரூ.100-க்கும் குறைவாகவே பெற்றுக் கொள்ள முடியும். இதன் மதிப்பு தங்கத்தின் விலையை பொறுத்து மாறுபடும். சிறிய தொகையாக இருந்தாலும், இதில் தொடர்ச்சியாக சேமித்தால் நிச்சயமாக பலன் அளிக்கும். இதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் ரிஸ்க் குறைவாகவும், விலை தகவல்கள் வெளிப்படையாகவும் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இது போன்று சேமித்து வைத்த பணத்தை பி.பி.எஃப் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இது குறித்து முழுமையாக அறியாதவர்கள், தகுந்த நிபுணர்களின் ஆலோசனையைக் கொண்டு முதலீடு செய்வது தேவையற்ற நிதி அபாயத்தை தடுக்க உதவும். மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும் போது இதில் ரிஸ்க் இருப்பதால், கடன் பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, இது போன்ற பல்வேறு நிதி சேமிப்பு திட்டங்களை ஆராய்ந்து நம்முடைய குடும்ப சூழல் மற்றும் பொருளாதார நிலையை பகுப்பாய்வு செய்து முதலீடு செய்தால், எதிர்காலம் குறித்து கவலை இன்றி வாழலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.