/indian-express-tamil/media/media_files/2025/09/10/toyota-2025-09-10-13-49-29.jpg)
ஜி.எஸ்.டி குறைப்பு: ரூ.3.49 லட்சம் வரை விலை குறைந்த ஃபார்ச்சூனர்; கார் வாங்க சரியான நேரம்!
ஜி.எஸ்.டி மற்றும் இழப்பீட்டு செஸ் நீக்கம் ஆகிய மத்திய அரசின் வரி சீர்திருத்தங்கள், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளன. இதன் விளைவாக, கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களின் விலைகளும் குறையத் தொடங்கி உள்ளன. இதனால், பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது மாடல்களின் திருத்தப்பட்ட விலைகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த ஜி.எஸ்.டி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சமீபத்திய நிறுவனம் டொயோட்டா ஆகும். புதிய ஜி.எஸ்.டி அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தங்கள் கார்களின் விலையைக் குறைப்பதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ஜி.எஸ்.டி விகிதங்கள் அமலுக்கு வரும் அதே நாளான செப்.22 முதல், திருத்தப்பட்ட புதிய விலைகள் அமலுக்கு வரும். பண்டிகைக் காலத்திற்குள் டெலிவரி கிடைப்பதை உறுதிசெய்ய, வாடிக்கையாளர்கள் விரைவில் முன்பதிவு செய்யுமாறு டொயோட்டா கேட்டுக்கொண்டுள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சேவை துணைத் தலைவர் வரீந்தர் வாத்வா கூறுகையில், "இந்த சிறப்புமிக்க சீர்திருத்தத்திற்காக இந்திய அரசுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் வாகனங்களை வாங்க வழிவகுப்பதுடன், ஒட்டுமொத்த வாகனத் துறை மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது. பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, விற்பனையை மேலும் அதிகரிக்க உதவும் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
டொயோட்டா கார்களின் விலை குறைப்பு
புதிய விலை குறைப்பால், டொயோட்டா மாடல்களின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, ஃபார்ச்சூனர் காரின் விலை ரூ.3.49 லட்சம் வரை குறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து அதன் பிரீமியம் ரக காரான லெஜெண்டர்-ன் விலை ரூ.3.34 லட்சம் வரை குறைந்துள்ளது. ஃபார்ச்சூனர் மற்றும் லெஜெண்டரின் ஆரம்ப விலைகள் முறையே ரூ.36.05 லட்சம் மற்றும் ரூ.44.51 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும். மற்ற மாடல்களின் விலைக் குறைப்பு விவரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
மாடல் | விலைக் குறைப்பு |
க்ளான்ஸா (Glanza) | ரூ.85,300 வரை |
டைசர் (Taisor) | ரூ.1,11,100 வரை |
ரூமியோன் (Rumion) | ரூ.48,700 வரை |
ஹைரைடர் (Hyryder) | ரூ.65,400 வரை |
க்ரிஸ்டா (Crysta) | ரூ.1,80,600 வரை |
ஹை கிராஸ் (Hycross) | ரூ.1,15,800 வரை |
ஃபார்ச்சூனர் (Fortuner) | ரூ.3,49,000 வரை |
லெஜெண்டர் (Legender) | ரூ.3,34,000 வரை |
ஹிலக்ஸ் (Hilux) | ரூ.2,52,700 வரை |
கேம்ரி (Camry) | ரூ.1,01,800 வரை |
வெல்ஃபயர் (Vellfire) | ரூ.2,78,00 வரை |
டொயோட்டா நிறுவனம், அதன் அனைத்து மாடல்களின் ஒவ்வொரு வேரியண்ட்டின் திருத்தப்பட்ட விலைகளையும் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஜி.எஸ்.டி விகிதங்கள்: கார்களின் விலை மலிவாகும்
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி கட்டமைப்பின்படி, கார்களின் விலை குறைந்துள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளமும், 1,200சிசி பெட்ரோல் அல்லது 1,500சிசி டீசல் எஞ்சின் கொண்ட சிறிய கார்களுக்கு, 28% ஜிஎஸ்டி-க்கு பதிலாக இப்போது 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும். இதனால், அவற்றின் விலை 5% முதல் 13% வரை குறையும்.
4 மீட்டருக்கு மேல் நீளமும் பெரிய எஞ்சின்களும் கொண்ட கார்களுக்கு, 28% ஜிஎஸ்டி-க்கு பதிலாக 40% ஜிஎஸ்டி விதிக்கப்படும். இருப்பினும், இழப்பீட்டு செஸ் நீக்கப்பட்டதால், அவற்றின் ஒட்டுமொத்த வரிச் சுமை குறைந்து, விலை 3% முதல் 10% வரை குறையும். மெர்சிடிஸ்-பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற சொகுசு கார்களுக்கு, முன்பு 50% வரி விதிக்கப்பட்டு வந்தது (28% ஜிஎஸ்டி + 22% செஸ்). இப்போது, அவற்றுக்கு ஒரே மாதிரியான 40% வரி மட்டுமே விதிக்கப்படும். இந்த மாற்றத்தால், சொகுசு கார்களின் விலையும் கணிசமாக குறையும். ஒட்டுமொத்தமாக, இந்த ஜிஎஸ்டி மாற்றம் சிறிய, நடுத்தர மற்றும் சொகுசு வாகனங்கள் என அனைத்து வகை கார்களின் வாங்குபவர்களுக்கும் பயன் அளிக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.