பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்செல் திவாலாகி விட்டதாகவும், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதியும் இழுத்து மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரத்திலிருந்து பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கிய நிகழ்வு என்னவென்றால் அது ஏர்செல் நெட்வோர்க் பிரச்சனை தான். ஏர்டெல் சிம்மை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்களுக்கு திடீரென்று சேவை நிறுத்தப்பட்டது. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் நகரங்களில் இருக்கும் ஏர்செல் கடைகளுக்கு சென்று போராட்டம் நடத்தத் துவங்கினர்.
ஏர்செல் மற்றும் அதற்கான டவர் நிறுவனத்துடன் இருந்த நிதி பிரச்சனை காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன் பின்பு, இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு தற்காலிகமாக சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம், ஏர்செல் நிறுவனம் சுமார் 15,000 கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதால், தங்கள் நிறுவனத்தை திவாலாகி விட்டதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. இந்த கடிதம் மீதான் விசாரணை முடிவடைந்த நிலையில், தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்பாயம், ஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளது. மேலும், வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் முழுவதுமாக மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், அந்நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் சேவையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. வருகிற, ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களின் சேவையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.