scorecardresearch

திருச்சி ரயில்வே; 10 மாதங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள் மூலம் ரூ.8 கோடி வருவாய்

திருச்சி கோட்டத்தில் உள்ள 7 ஏ.டி.வி.எம் எந்திரங்கள் மூலம் கடந்த 10 மாதங்களில் 14 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் 8 லட்சத்து 9 ஆயிரம் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெற்றுள்ளனர். இதன் மூலம் ரூ.8 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

Trichy
Trichy Railways

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் பசுமையை நோக்கிய பயணத்தில் காகிதம் இல்லாத டிக்கெட் நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளை யு.டி.எஸ் எனும் செல்போன் செயலி மூலம் பெற்றுக் கொள்ளும் முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே யு.டி.எஸ் செயலியை செல்போனில் நிறுவிக் கொண்டால் அதன் மூலம் முன்பதிவு இல்லா ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட், பிளாட் பாரம் டிக்கெட், சீசன் டிக்கெட் புதுப்பித்தல் உள்ளிட்ட வசதியை சில விநாடிகளில் செய்து கொள்ள முடியும். ரயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவிலும், 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருந்து இந்த செயலி மூலம் டிக்கெட்டுகளை பெற முடியும்.

ரயில் நிலையங்களில் உள்ள ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்தும் டிக்கெட்டுகளை பெற முடியும். ஆனால் ரயில் நிலையத்தில் இருந்த படியே இந்த செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெற முடியாது. புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டர்களில் இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. வாலட் வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

திருச்சி கோட்டத்தில், கடந்த  ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலான 10 மாதங்களிலான காலப்பகுதியில் யு.டி.எஸ் செல்போன் செயலி மூலம் 99 ஆயிரத்து 235 முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.98 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 515 பயணிகள் பயனடைந்துள்ளனர்.

இதேபோல் திருச்சி கோட்டத்தில் திருச்சி, தஞ்சை ரயில் நிலையங்களில் தலா 2 ஏ.டி.வி.எம் எந்திரங்கள் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை ரயில் நிலையங்களில் தலா 1 ஏ.டி.வி.எம் எந்திரங்கள் என்று 7 தனியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள் ஏ.டி.வி.எம் உள்ளன. விரைவில் கூடுதலாக 12 ஏ.டி.வி.எம் எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.

திருச்சி கோட்டத்தில் உள்ள 7 ஏ.டி.வி.எம் எந்திரங்கள் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலான 10 மாதங்களில் 14 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் 8 லட்சத்து 9 ஆயிரம் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெற்றுள்ளனர். இதன் மூலம் ரூ.8 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Trichy railways uts app ticket booking