Trichy Vietnam flight : திருச்சியில் இருந்து வியட்நாமின் ஹோசிமின் நகருக்கு நேரடி விமான சேவை நவம்பர் மாதம் 2 முதல் தொடங்குகிறது. இதனை வியட்நாம் நாட்டின் முன்னணி விமான நிறுவனமான வியட்ஜெட் விமான நிறுவனம் இயக்கவிருக்கின்றது.
இது தொடர்பாக திருச்சி கோர்ட்யார்ட் மரியார்ட் ஹோட்டலில், வியட்ஜெட் நிறுவனத்தின் வர்த்தக துணைத்தலைவர் ஜெய் எல்.லிங்கேஸ்வரன் புதன்கிழமை (செப்.28) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “வியட்நாம் நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழும் வியட்ஜெட் விமான நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் வகையில், வரும் நவம்பர் மாதம் 2-ம் தேதி முதல் திருச்சி-வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகருக்கு இடையே வாரத்திற்கு 3 நாள்களுக்கு இரு மார்க்கத்திலும் விமானங்களை இயக்க விருக்கின்றோம்.
கொச்சியில் இருந்து ஹோ சி மின் நகருக்கு செல்லும் விமான சேவையுடன் இந்த புதிய விமான சேவையை திருச்சியில் இருந்து துவங்குவதன் மூலம் இந்தியாவின் தென்பகுதியை வியட்நாமுடம் இணைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
திருச்சியில் இருந்து வியட்நாம்க்கு வாரத்தின் முதல் நாளான திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருச்சியில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் விமான ஹோ சி மி நகருக்கு உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு சென்றடையும்.
அதேபோல் அங்கிருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் வியட்நாம் நேரப்படி இரவு 8 மணிக்கு புறப்பட்டு இந்திய நேரப்படி திருச்சிக்கு இரவு 11.30 மணிக்கு வந்தடையும்.
தமிழ்நாட்டில் இருந்து வியட்நாம்க்கு நேரடி விமானப் போக்குவரத்து என்பது திருச்சி விமான நிலைய வளர்ச்சிக்கும், தமிழகம்-வியட்நாம் சுற்றுலாத்துறை, இந்தியாவின் வர்த்தக வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும்.
குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை வியட்ஜெட் வழங்கவிருக்கின்றது. இந்தியாவில் இருந்து வியட்நாம் செல்லும் வியட்ஜெட் விமானங்களில் செப்டம்பர் இறுதியில் இருந்து அக்டோபர் 25 வரை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கவிருக்கின்றோம்.
அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரி கூடுதல் சலுகையாக திருச்சியில் இருந்து வியட்நாம் பறக்கும் பயணிகளிடம் இருந்து ரூ.5,555-ஐ மட்டுமே கட்டணம் வசூலிக்க நிர்ணயித்திருக்கின்றோம். குறைந்த கட்டணத்தில் வியட்ஜெட் நிறைந்த சிறந்த சேவையை பயணிகளுக்கு வழங்குவதன் மூலம் இந்தியா-வியட்நாம் மக்களிடையே தொழில், வர்த்தகம் நல்ல வளர்ச்சி அடையும் என நாங்கள் நம்புகின்றோம்” என்றார்.
வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் வியட்ஜெட் டெல்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி மற்றும் திருச்சி ஆகிய 5 பெருநகரங்களை இணைக்கும் 35 வாராந்திர விமான சேவைகளை இருமார்க்கத்திலும் வியட்நாமின் ஹனோய், ஹோ சி மின் நகருக்கும் இயக்கவிருக்கின்றது.
திருச்சியில் இருந்து வியட்நாம்க்கு குறைந்த கட்டணத்தில் விமான பயணம் என்பதால் திருச்சி வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா செல்லும் பிரபலங்கள் இடையே பெரும் வரவேற்பை பெரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“