/indian-express-tamil/media/media_files/2025/05/23/3LCMKTzIQCf71bstoo6r.jpg)
அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு, "அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும், இந்தியா மட்டுமல்ல, வேறு எங்கும் அல்ல" என்று டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த நிபந்தனையை ஆப்பிள் நிறைவேற்றத் தவறினால், அந்நிறுவனம் அமெரிக்காவிற்கு "குறைந்தது" 25 சதவீதம் வரி செலுத்த நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம், இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இல்லாவிட்டால், இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவாக்க வேண்டாம் என்று ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்கிடம் தான் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
"அமெரிக்காவில் விற்கப்படும் ஆப்பிள் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் நான் நீண்ட காலத்திற்கு முன்பே தெரிவித்து விட்டேன். இல்லையென்றால், ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி," என ட்ரம்ப் இன்று ஒரு சமூக ஊடக பதிவில் கூறியுள்ளார்.
சீனாவில் தனது மிகப்பெரிய உற்பத்தித் தளத்தைக் கொண்டுள்ள ஆப்பிள், சீனாவிற்கு விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வரிகள் காரணமாக, குறுகிய காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்கத் திட்டமிட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நடந்த ஆய்வாளர்களுடனான ஒரு சந்திப்பில், ஜூன் காலாண்டில் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் இருந்து வந்திருக்கும் என்று டிம் குக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, ஐபோன்கள் முதன்மையாக சீனா, இந்தியா மற்றும் வியட்நாமில் அசெம்பிள் செய்யப்படுகின்றன. ஆப்பிள், இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுவது ஆப்பிள் நடைமுறைக்கு ஒவ்வாதது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில், அந்நிறுவனத்திற்கு அமெரிக்காவில் உற்பத்தி மற்றும் சப்ளையர் தளம் இல்லை. "விநியோகச் சங்கிலிகள் ஒரே நாளில் மறுசீரமைக்கப்படாது. ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள், பல மாதங்கள் மற்றும் பல வருட வியூகங்களுக்குப் பிறகு விநியோகச் சங்கிலி முடிவுகளை எடுக்கின்றன" என்று ஒரு மூத்த அரசு அதிகாரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆப்பிளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்த போதிலும், இந்த வாரத் தொடக்கத்தில், ஆப்பிளின் ஒப்பந்த உற்பத்தியாளர் ஃபாக்ஸ்கான், லண்டன் பங்குச் சந்தைக்குத் தெரிவித்த தகவலின்படி, இந்தியாவில் உள்ள தனது யூனிட்களில் ஒன்றான யுஷான் டெக்னாலஜிஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டில் 1.49 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 12,400 கோடி) முதலீடு செய்வதாகக் கூறியுள்ளது. இந்த ஆலை தமிழ்நாட்டில் அமைய உள்ளது. ஃபாக்ஸ்கானுக்கு தமிழ்நாட்டில் ஒரு பெரிய ஐபோன் உற்பத்தித் தளம் ஏற்கனவே உள்ளது.
கடந்த அக்டோபரில், சென்னைக்கு சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிபுரத்தில் யுஷான் டெக்னாலஜிஸ் மூலம் ரூ. 13,180 கோடி திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்திருந்தது. பங்குச் சந்தைக்கு ஃபாக்ஸ்கான் அளித்த தகவலின்படி, அதன் புதிய முதலீடு இந்த ஆலைக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் இருந்து விலகி, ஐபோன் உற்பத்திக்கு ஒரு முக்கிய சந்தையாகவும், தனது சப்ளையர்களுக்கு ஒரு அடிப்படையான தளமாகவும் இந்தியாவை ஆப்பிள் அடையாளம் கண்டுள்ளது. தற்போது, ஆப்பிள் தனது மொத்த ஐபோன் உற்பத்தியில் கிட்டத்தட்ட 15 சதவீதத்தை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. வரும் ஆண்டுகளில் இதை கால் பங்காக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஆப்பிளின் அசெம்பிளிங் செயல்பாடு, அரசாங்கத்தின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
சீனாவை அதிகமாக பாதித்த வர்த்தகப் போர் நடவடிக்கைகளில் ஆப்பிள் சிக்கியது. அமெரிக்க நிர்வாகம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளுக்கு பல வரிகளில் இருந்து விலக்கு அளித்த போதிலும், எதிர்காலத்தில் இந்த வகைகளில் புதிய வரிகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. ட்ரம்ப் அதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், அதன் பிறகு அமெரிக்காவும், சீனாவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
ஸ்மார்ட்போன்களுக்கான பி.எல்.ஐ திட்டத்தின் கீழ் மானியங்களின் மிகப்பெரிய பயனாளிகளாக ஆப்பிள் மற்றும் அதன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளனர். இத்திட்டத்தின் கீழ், 2022-23 முதல் 2024-25 வரையிலான மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ 8,300 கோடி) தொகையை விநியோகித்துள்ளது. இதில் ஆப்பிளின் மூன்று ஒப்பந்த உற்பத்தியாளர்கள் கூட்டாக 75 சதவீதத்திற்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஆப்பிளின் ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெகாட்ரான் ஆகியவை மூன்று ஆண்டுகளில் மொத்தம் கிட்டத்தட்ட ரூ. 6,600 கோடியை பெற்றுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.